பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை பூர்த்தி செய்ய சிலாங்கூர் 300 மில்லியன் ரிங்கிட்டை செலவு செய்யும்

கிள்ளானில் மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கு தான் அளித்த வாக்குறுதியை பிஎன் நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை பூர்த்தி செய்வதற்கு 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் சிலாங்கூர் அரசாங்கம் 300 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கும்.

இன்று காலை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்பித்த மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் அந்தத் தகவலை வெளியிட்டார்.

2008 பொதுத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக மூன்றாவது பாலத்தைக் கட்டுவதற்கான வாக்குறுதியை பிஎன் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

“12வது பொதுத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னதாக அந்தப் பாலத்துக்கான கட்டுமானத் தொடக்க விழாவும் நடத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.”

“துரதிர்ஷ்டவசமாக நான்கு ஆண்டுகளாகியும் பாலத்தை ஏன் ஒரு தூணைக் கூடக் காணவில்லை. பாலத்தைக் கட்டுவது கூட்டரசு அரசாங்கத்தின் பொறுப்பு என்பது எங்களுக்குத் தெரிந்தாலும் அம்னோ/பிஎன் நிறைவேற்றாத வாக்குறுதியை ‘நிறைவேற்றுவதற்கு’ மாநில அரசாங்கம் நிதி ஒதுக்கும்,” என காலித் சொன்னார்.

பல்வேறு அடிப்படை வசதித் திட்டங்களை அமலாக்குவதற்கு மாநில அரசாங்கம் சேமித்து வைத்துள்ள 500 மில்லியன் ரிங்கிட்டில் அந்த 300 மில்லியன் ரிங்கிட் ஒரு பகுதியாகும்.

“மொத்த கூட்டரசு வருமானத்தில் 23 விழுக்காட்டை வழங்கி தேசியப் பொருளாதாரத்தில் சிலாங்கூர் முக்கியப் பங்காற்றிய போதிலும் கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் மக்களுக்கு மேம்பாட்டு நிதிகளை வழங்குவதில் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதால் மாநில அரசாங்கம் 2013ம் ஆண்டுக்கான மாநில சேமிப்பை பயன்படுத்த வேண்டியுள்ளது,” என்றும் காலித் தெரிவித்தார்.

2012ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி மாநில சேமிப்பு அளவு 2.57 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்றும் மந்திரி புசார் குறிப்பிட்டார்.

அத்துடன் ஆறுகளில் சேரும் மழை நீரை சுத்திகரிக்கப்படும் நீருக்கான ஆதாரமாக பயன்படுத்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

வடிகால் நீர்பாசனத் துறைக்கு கூட்டரசு அரசாங்கம் ஒரு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கத் தவறியதைத் தொடர்ந்து மாநிலத்தில் வடிகால் முறையை மேம்படுத்த அந்த 500 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்படும்.

எஞ்சிய 50 மில்லியன் ரிங்கிட் மக்கள் தாங்கிக் கொள்ளக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவதற்கு வழங்கப்படும். அதனை சிலாங்கூர் வீடமைப்பு சொத்து வாரியம் நிர்வாகம் செய்யும்.

காலித் இன்று காலை 2013ம் ஆண்டுக்கு 1.63 பில்லியன் ரிங்கிட் பெறும் சம சீரான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அந்த வரவு செலவுத் திட்டத்தின் தலைப்பு “சிலாங்கூர் மலேசியப் பொருளாதாரத்துக்குத் தலைவர்” என்பதாகும்.

அதில் 61 விழுக்காடு அல்லது 996,980,690 ரிங்கிட் நடைமுறைச் செலவுகளுக்காகும். மேம்பாட்டுச் செலவுகளுக்கு 39 விழுக்காடு அல்லது  633,019,310 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் நடைமுறைச் செலவுகள் 0.3 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளன. மேம்பாட்டுச் செலவுகள் ஐந்து விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளன. இது மாநில அரசாங்கத்தில் நல்ல, முறையான நிதி நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டு என காலித் தொடர்ந்து கூறினார்.