கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம்: ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை?

துவா (இஸ்லாமியத் தொழுகை) சொல்லாததற்காக நான்கு ஒராங் அஸ்லி பிள்ளைகளை கன்னத்தில் அறைந்த ஆசிரியர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சரும் சட்டத் துறைத் தலைவரும் விளக்க வேண்டும் என பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கேட்டுக் கொண்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கத் தாமதமாவது அத்தகைய அத்துமீறல்கள் தொடருவதற்கு அனுமதி அளித்ததாகி விடும் என அவர் சொன்னார். போலீஸ் புகாரை மீட்டுக் கொள்வதற்கு ஒவ்வொரு மாணவருடைய குடும்பங்களுக்கும் 300 ரிங்கிட் கொடுக்க ஆசிரியர்கள் முன் வந்துள்ளது அத்தகைய அத்துமீறல்களுக்கு ஒர் எடுத்துக்காட்டு ஆகும்.

“அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதைத் தாமதப்படுத்தும் போது இது தான் நிகழும். அந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கக் கூடாது.”

“அந்த விஷயத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளது. அதனால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்,” என கோபிந்த் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு சாதாரண விஷயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது போலீசுக்கும் கல்வி அமைச்சுக்கும் ‘அவமானமாகும்’. அவை மீது சமூக நம்பிக்கை தளர்ந்து வருவதற்கான காரணம் இது தான் என்றும் அவர் சொன்னார்.

“இதுகாறும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை கல்வி அமைச்சரும் சட்டத்துறைத் தலைவரும் விளக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் ஏன் இந்த தாமதம் ?” என கோபிந்த் வினவினார்.

பணம் கொடுக்க முன் வந்தது நிராகரிக்கப்பட்டது

ஆசிரியர் குழு ஒன்று நவம்பர் 7ம் தேதி ஒவ்வொரு பிள்ளைக்கும் 300 ரிங்கிட் வீதம் அந்தப் பிள்ளைகளுடைய குடும்பங்களுக்கு பணம் கொடுக்க முன் வந்ததாக பிஹாய் தேசியப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவர் அரோம் அசிர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ள பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லவும் அந்த ஆசிரியர்கள் தயாராக இருந்தனர். ஆனால் அந்தப் பணத்தை பெற்றோர்கள் நிராகரித்து விட்டனர்.

அந்த பள்ளிப் பிள்ளைகள் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததை புலனாய்வுகள் காட்டியுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இந்த மாதத் தொடக்கத்தில் கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கூறியிருந்தார்.

பெற்றோர்களுடைய முன் அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஒராங் அஸ்லி பிள்ளையையும் சமயப் போதனைகளைப் பெறுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என 1954ம் ஆண்டுக்கான பழங்குடி மக்கள் சட்டத்தின் 17வது பிரிவு கூறுகின்றது.

அதனை மீறுகின்ற யாருக்கும் 500 ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்பட வேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 17(3) தெரிவிக்கின்றது.

பிஹாய் தேசியப் பள்ளி கிளந்தான் பேராக் எல்லையில் குவா மூசாங் உட்புறப் பகுதியில் ஒராங் அஸ்லி பிள்ளைகளுக்கான சிறப்புப் பள்ளிக்கூடமாகும்.