மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளி: வாரிய உறுப்பினர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்

மிஞ்ஞாக் செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டுவதற்கு ரிம5.5 மில்லியன் நிதி வழங்க அளித்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் முன்னதாக அறிவித்திருந்தவாறு அப்பள்ளியின் வாரியக்குழு உறுப்பினர்கள் எழுவர் இன்று நள்ளிரவு மணி சரியாக 12.00 க்கு தங்களுடைய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

செரண்டாவில் தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு யுஎம்டபுள்யு ஹோல்டிங்ஸ் இரண்டு ஏக்கர் நிலத்தை 2007 ஆம் ஆண்டில் வழங்கியது.

அந்நிலத்தில் தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலின் போது ஏப்ரல் 24, 2010 இல்பிரதமர் நஜிப் ரிம1மில்லியன் வழங்க வாக்குறுதியளித்திருந்தார்.

அதன் பின்னர் அப்பள்ளிக்கூட அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஜூன் 7, 2012 இல் வருகை புரிந்த கல்வி அமைச்சர் முகைதின் யாசின் பள்ளி வாரியத்திடம் புதிய பள்ளி கட்டுவதற்காக ரிம2.5 மில்லியன் வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

மஇகா தலைவர் ஜி. பழனிவேல் தமிழ்ப்பள்ளிகளுக்கான 2012 ஆண்டு சிறப்பு நிதியிலிருந்து ரிம2 மில்லியன் வழங்குவதாக அக்டோபர் 7, 2012 இல் அறிவித்தார். இச்செய்தி தமிழ் நேசன் மற்றும் மலேசிய நண்பன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.

இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செரண்டாவில் தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கான தொடக்க வேலைகள் அனைத்தும் செய்யப்பட்டு விட்டன. கட்டட வரைப்படத்திலிருந்து வற்புறுத்தப்பட்டபடி கட்டடம் கட்டுவதற்காக பூமிபுத்ரா குத்தகையாளர் வரையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வாக்குறுதிப்படி நிதி எவரிடமிருந்தும் இன்று நள்ளிரவு வரையில் வரவில்லை என்று பள்ளி வாரியத் தலைவர் எ.இராம ராவ் கூறினார்.

இன்று (20.11.2012) நள்ளிரவு தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தில் இராம ராவுடன் இதர  வாரியக்குழு உறுப்பினர்களான வி. அருணாசலம், என். இராமசாமி, கதிரவன், முனியப்பன், இராமையா மற்றும் மணிமாறன்  ஆகியோர் இறங்கியுள்ளனர்.

“நம்பிக்கை” இழந்துவிட்டோம்

வாக்குறுதி அளித்துள்ள நிதியை நவம்பர் 20 க்குள் பள்ளி வாரியத்திடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் நவம்பர் 21 நள்ளிரவில் வாரியக்குழு உறுப்பினர்கள் சாகும் வரையில்   உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குவர் என்று நவம்பர் 3 இல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், இலாகாகளுக்கும் அறிவித்து விட்டோம் என்று இராம ராவ் கூறினார்.

“பிரதமர் நஜிப் ரிம1 மில்லியன் நிதி வழங்க அறிவித்து இரண்டு வருடம் ஏழு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

“கல்வி அமைச்சரின் அறிவிப்பு ஆறு மாதங்களாகி விட்டது.

“மஇகா தலைவரின் அறிவிப்பு வெளிவந்து இரண்டு மாதங்களாகி விட்டன. ஆனால், பணம் வரவில்லை. ‘நம்பிக்கை’ இழந்து விட்ட வாரிய உறுப்பினர்களாகிய நாங்கள் இங்குள்ள மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்”, என்று இராம ராவ் கூறினார்.

உண்ணாவிரதம் தொடங்கிய போது செரண்டா மக்கள் பலர், எதிரணியினர் உட்பட, வந்து வாழ்த்து தெரிவித்ததாக அவர் கூறினார்.

போலீஸ் ஸ்பெசல் பிரான்ச்சினரும் வந்திருந்தனர். ஆனால் வாக்குறுதியளித்த தலைவர்களைச் சார்ந்தவர்கள் எவரும் வரவும் இல்லை, தொடர்புகொள்ளவும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.