லினாஸ் எதிர்ப்பு பசுமை நடையை ஏற்பாடு செய்துள்ளவர் அதன் திட்டத்தில் சிறிய மாற்றத்தைச் செய்துள்ளார்.
பசுமை ஊர்வலத்தினர் 300 கிலோமீட்டர் தொலைவை 14 நாட்களில் கடந்த பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க டாத்தாரான் மெர்தேக்காவை ஞாயிற்றுக் கிழமை அடைந்ததும் அங்கு முகாம்களை அமைத்துக் கொள்வர்.
அடுத்த நாள் காலை தங்களைப் பிரதமரும் எம்பி-க்களும் சந்திப்பதற்காக அவர்கள் அங்கு காத்திருப்பார்கள்.
தனிப்பட்ட முறையில் அந்த நடைக்கு ஏற்பாடு செய்துள்ள பசுமைப் பேரணி (ஹிம்புனான் ஹிஜாவ்) தலைவர் வோங் தாக் அந்தத் தகவலை நேற்றிரவு பாகாங் பெந்தோங்கில் அறிவித்தார்.
லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தை எதிர்க்கும் பசுமை ஊர்வலத்தினரை மக்கள் பேராளர்கள் டாத்தாரன் மெர்தேக்காவில் சந்திப்பது நல்லது என வோங் பின்னர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
“நேற்று மதிய உணவு நேரத்தின் போது எல்லாப் பங்கேற்பாளர்களும் களைப்படைந்துள்ளதை அவர்களுடைய முகங்கள் காட்டின. மேலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடப்பதைக் கூட அவர்கள் தாங்க முடியாது எனத் தோன்றியது.’
“ஆகவே நாடாளுமன்றத்துக்கு 3 அல்லது 4 கிலோமீட்டர் நடந்து செல்வதற்குப் பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களைச் சந்திக்க டாத்தாரான் மெர்தேக்காவுக்கு வர வேண்டும்,” என்றார் அவர்.
எம்பி-க்கள் வர மறுத்தால் என்ன செய்வீர்கள் என அவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்,” எம்பி-க்களுக்கு மக்கள் மீது இன்னும் அக்கறை இருந்தால், மக்கள் பேராளர்கள் என்ற தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்ற விரும்பினால் அவர்கள் அங்கு இருக்க வேண்டும்.”
நாங்கள் அமைதியாக கலைந்து செல்வோம்
ஊர்வலத்தினர் டாத்தாரான் மெர்தேக்காவுக்குள் நுழைவதை அதிகாரிகள் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என அவர் வலியுறுத்தினார்.
“டாத்தாரானை அடைய முடியாது என்ற எண்ணமே எங்களுக்கு எழவில்லை. நட்டின் கௌரவத்தையும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட பொறுப்புள்ள குடிமக்கள் அதற்குள் நுழைவதை எதுவும் யாரும் தடுக்க முடியாது ?”
நவம்பர் 26ம் தேதி திங்கட்கிழமை காலை மணி 9க்கு லினாஸ் எதிர்ப்புப் போராளிகளுடன் கலந்துரையாட பிரதமரும் மற்ற எம்பி-க்களும் வருவர் எனத் தாம் நம்புவதாக வோங் சொன்னதாக நேற்றிரவு என்டிவி7ல் ஒளிபரப்பான மண்டரின் செய்தியில் அறிவிக்கப்பட்டது.
பிரதமரைச் சந்திக்க முடியா விட்டாலும் பசுமை ஊர்வலத்தினர் அமைதியாகக் கலைந்து செல்வர் என்றும் அவர் சொன்னார்.
ஞாயிற்றுக் கிழமை டாத்தாரானை அடைந்து அடுத்த நாள் காலை நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ஊர்வலமாகச் சென்று கெபெங்கில் அமையும் லினாஸ் தொழில் கூடத்தை மூடுமாறு கேட்டுக் கொள்ளும் தீர்மானம் ஒன்றை நஜிப்பிடம் வழங்குவதுடன் பாதுகாப்பான மலேசியாவுக்கான தங்கள் பயணத்தை நிறைவு செய்ய பசுமை ஊர்வலத்தினர் ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர்.