கடந்த அக்டோபர் மாதம் காஜாங் சிறையில் நிகழ்ந்த ஆர். குமாரராஜாவின் இறப்புக்குச் சிறை அதிகாரிகளின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி அதை போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அவரின் தாயார் வலியுறுத்தியுள்ளார்.
அதன் தொடர்பில், இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்த எம். சூரியகாந்தி,51, சிறை அதிகாரிகள் தம் மகனுக்கு மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கலாம் என்றார்.
“ஏன் அவர்கள் அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவில்லை? ஏன் எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை? மூன்று நாட்களாக என் மகன் உடல் நலன் குன்றியிருந்ததை. அவர்கள் ஏன் எனக்குத் தெரிவிக்கவில்லை?”, என்று அழுகைக்கிடையே அந்தத் தாயார் கூறினார்.
அவரின் வழக்குரைஞர் ஜி.சிவமலர், சிறை விதிகளின்படி கைதி ஒருவரின் உடல் நலன் மிக மோசமான நிலையில் இருந்தால் அதிகாரிகள் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
ஆனால், குமாரராஜாவைப் பொருத்தவரை அவர் இறந்து 24 மணி நேரம் ஆன பின்னரே அவரின் குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
குமாராராஜா,27, 2011-இல் மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்திற்காக சிறையில் வைக்கப்பட்டார். 2013 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்படுவதாக இருந்தது.
ஆனால், அவர் அக்டோபர் 29-இல் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய சவப் பரிசோதனை எதுவும் செய்யப்படவில்லை என்பதால் அவர் ஏய்ட்ஸ் நோயால் இறந்தார் என்று கூறப்பட்டதை சூரியகாந்தி ஏற்கவில்லை.
சூரியகாந்தியின் வற்புறுத்தலுக்கு இணங்கி அதிகாரிகள் சவப் பரிசோதனை செய்ய முன்வந்தனர். நவம்பர் 2-இல் சவப் பரிசோதனை நடந்தது.
அதிலிருந்து கிடைத்த தொடக்க நிலை அறிக்கை, குமாரராஜாவின் மரணத்துக்கு “பெக்டீரியா அல்லது வைரஸால் இருதய தசைகளில் ஏற்பட்ட வீக்கமே காரணம்” என்று தெரிவித்தது.