செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு அளிக்கப்படிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி விடுத்து நேற்று இரவு தொடங்கி உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ள பள்ளி வாரியத் தலைவர் இராம ராவ் மற்றும் அவரது குழுவினரின் அர்ப்பணிப்பு உணர்வை மதிக்கிறோம் என்று உண்ணாவிரதப் போராளிகளைச் சந்தித்த சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
ஏற்கனவே பிரதமர் முதல் மஇகா தேசியத் தலைவர் வரை செரண்டாவில் ஒரு தமிழ்ப்பள்ளியைக் கட்ட ரிம55 இலட்சம் வழங்க அளித்திருந்த வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பதும், இது நீண்ட காலமாகத் தேர்தல் வாக்குறுதியாக இருப்பதும் வருத்தப்பட வேண்டிய விவகாரமாகவுள்ளது என்றாரவர்.
“இந்த வாரிய உறுப்பினர்கள் அதிக விரக்தியடைந்து உள்ளதே இன்றைய உண்ணாவிரதத்திற்கான காரணமாகும். கடந்த இடைத்தேர்தலில் பிரதமரே வாக்குறுதி அளித்தும், இறுதியாகத் துணைப் பிரதமர் அடிக்கல் நாட்டியும், பள்ளிக்கான கட்டடத்திற்கு இன்றுவரை மானியம் இல்லையா? அப்படியானால் இதுவரை தமிழ்ப்பள்ளிகளுக்காக நூற்றுக்கணக்கான மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறிவரும் பாரிசான் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பெரும் சந்தேகத்திற்குரியவைகளாக இருக்கின்றன.
பக்காத்தான் சிலாங்கூர் மாநில அரசு கிள்ளான் மிட்லண்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான கட்டட வேலைகளை ஒரே ஆண்டில் முடித்துள்ளபோது, உலுசிலாங்கூர் இடைத்தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் செரண்டா தமிழ்ப்பள்ளி பிரச்சனையை மத்தியப் பாரிசான் அரசு இழுத்தடிப்பது முறையாகாது என்றாரவர். .
இங்கு அதிகமான இந்தியர்கள் வாழ்கின்றனர். ஆனால், அவர்களின் பிள்ளைகளைப் பத்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களே அவர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளதற்கான காரணமாகும் என்பதனை அறிய மிக வருத்தமாக இருக்கிறது.
அகிம்சையான இப்போரட்டத்தின் வழி ஒரு தமிழ்ப் பள்ளிக்கான கட்டுமானத்திற்கான நிதியைப் பெற செரண்டா வட்டார மக்கள் களம் இறங்கியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளைப் பிரதமர் அவசரமாகக் கவனிக்க வேண்டும். ”வாக்குறுதிகளைக் காப்பாற்றும் அரசாங்கம்” என்றும் ”நம்பிக்கை” என்றும் இரண்டு முக்கிய கருப்பொருள்களைக் கொண்ட சுலோகங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும் பயன் படுவதாக இருக்கக் கூடாது. மாறாக அவை மக்கள் நலனுக்குச் செயல் வடிவம் அளிப்பவைகளாக இருக்க வேண்டும் என்றார் டாக்டர் சேவியர்.
“சிலாங்கூர் மாநில அரசாங்கமும் மக்களின் கோரிக்கைக்கு உதவத் தயாராக இருக்கிறது. மத்திய அரசுக்கு ஒரு மாதக் கால அவகாசம் வழங்குவோம். அதுவரை உண்ணா விரதத்தைக் கைவிடுங்கள்”, என்று அனைவரையும் சேவியர் கேட்டுக் கொண்டார்.
போராட்டு குழுவினரில் பெரும்பாலானவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால், இது போன்ற போராட்டங்கள் அவர்களின் உடல் நலனைப் பாதிப்பதுடன், மற்றக் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிக மன உளைச்சலைத் தரும் என்பதால், இந்த உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடக் கோரினார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று நண்பகல் சுமார் இரண்டு மணிக்கு உண்ணாவிரத்தை கைவிட ஒப்புக்கொண்ட அவர்களுக்குப் பழரசம் வழங்கி டாக்டர் சேவியர் ஜெயக்குமார் உண்ணா விரதத்தை முடித்துவைத்தார்.