மனித உரிமைகளுக்குப் போராடும் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர்களை அழைப்பது நாடாளுமன்றத்துக்குக் ‘கௌரவக் குறைவு’ என தற்காப்புத் துணை அமைச்சர் அப்துல் லத்தீப் அகமட் கூறியிருக்கிறார்.
“சுவாராமைப் பிரதிநிதிக்கும் அந்த இரண்டு வழக்குரைஞர்களும் ஹீரோக்களாக விரும்புகின்றனர். அவர்களைநமது நாடாளுமன்றத்தில் உயர்ந்த நிலையில் வைப்பது நமக்கு கௌரவக் குறைவாகும். யார் அவர்கள் ?”
“அந்த விளக்கம் அரசாங்கத்துக்கு அரசாங்கம் என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் செவிமடுக்கத் தயார். ஆனால் சுவாராம் வழக்குரைஞர்களான அந்த வில்லியம் போடோ, ( பாஹாசா மலேசியாவில் முட்டாள் என அர்த்தம். வழக்குரைஞருடைய துணை பெயர் Bourdon என்பதாகும்) ஜோசப் பிரெஹாமிடமிருந்து அல்ல. இப்போது தெளிவாகத் தெரியும் என நான் நம்புகிறேன்,” என்றார் அப்துல் லத்தீப்.
வரவு செலவுத் திட்டத்தில் தற்காப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் குறித்த குழு நிலை விவாதத்தை நிறைவுசெய்த போது தற்காப்பு துணை அமைச்சர் அவ்வாறு கூறினார்.
என்றாலும் புலனாய்வு செய்யும் பிரஞ்சு மாஜிஸ்திரேட்டுகள் மலேசியாவுக்கு வருவதை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் அவர்களுக்கு (புலனாய்வு நீதிபதிகள்) இங்கு எந்த அதிகாரமும் இல்லை. அவர்கள் விசாரிக்க விரும்பினால் நமது நீதித் துறையுடன் ஒத்துழைக்க வேண்டும். அந்தத் துறை தகவல்களைப் பெறுவதற்கு நமது சட்டங்களை பராமரிக்கும் போலீசாரை நியமிக்க முடியும்.”
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுவாராம் வழக்குரைஞர்கள் விளக்கமளிக்கவும் அதே வேளையில் அந்த விவகாரம் மீது புத்ராஜெயாவின் தரப்பை எடுத்துரைக்கவும் அரசாங்கம் அனுமதிக்குமா என பிகேஆர் பத்துஉறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அப்துல் லத்தீப் பதில் அளித்தார்.
அந்த பிரஞ்சு வழக்குரைஞர்கள் இன்று எம்பி-க்களுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை உள்துறை அமைச்சு வழங்கத் தவறியதால் அந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டு விட்டது.
கடந்த ஆண்டு மலேசியாவுக்கு வந்த போர்டோன் சுவாராம் நிதி திரட்டும் நிகழ்வில் பேசியதின் மூலம் தமது விசிட் பாஸ் அனுமதியை மீறியதாகக் கூறி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.