கெப்பாளா பத்தாஸில் உள்ள தேவான் மில்லியனியம் மண்படத்தில் நேற்றிரவு நடைபெற்ற பாஸ் 60வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டனர்.
அந்த எண்ணிக்கை பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட் ஆற்றிய சொற்பொழிவைச் செவிமடுப்பதற்கு 10,000-த்தையும் தாண்டியது.
பாஸ் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் வெள்ளிக் கிழமை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு நீடித்த பின்னர் அவை நேற்றிரவு நிறைவுக்கு வந்தன.
அந்த மூன்று மாடிக் கட்டிடம் முழுவதும் மக்கள் வெள்ளம் போல் நிறைந்திருந்தனர்.
கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அஜிஸ் உரையில் பெரும்பகுதி சமயம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அவ்வப்போது அவர் நகைச்சுவையாகவும் கோடி காட்டியும் பேசினார். அப்போது கூட்டத்தினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் உட்பட அனைத்து பாஸ் உயர் நிலைத் தலைவர்களும் பெர்மாத்தாங் பாவ் எம்பி அன்வார் இப்ராஹிம், பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் குவான் எங் ஆகியோரும் அங்கிருந்தனர். மூன்று மணி நேரத்துக்கு நீடித்த நிறைவு விழா நள்ளிரவு வாக்கில் நிறைவுக்கு வந்தது.
தஞ்சோங் தொக்கோங் டிஏபி ஏற்பாடு செய்திருந்த நிதி திரட்டும் விருந்திலிருந்து முன்னதாகவே புறப்பட்டு பினாங்குத் தீவில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து இரவு மணி 11க்கு லிம் அங்கு வந்து சேர்ந்தார்.
ஆனால் நேற்றிரவு முக்கியமான மனிதர் மட்டும் அங்கு காணப்படாதது தெளிவாகத் தெரிந்தது- அவர் தான் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஆவார்.
அது குறித்து விளக்கம் தருமாறு பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபுவிடம் வினவப்பட்ட போது கர்பால் வரதாதற்கான உண்மையான காரணம் தமக்குத் தெரியாது என்றார்.
கர்பால் அழைக்கப்படாமல் இருக்கும் சாத்தியமில்லை. ஏனெனில் பாஸ் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களை ஒட்டி கெப்பாளா பாத்தாஸ் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த பதாதைகளில் அவரது படங்களும் காணப்பட்டன.
“ஒரு வேளை அழைப்புக் கடிதம் அவரது அலுவலகத்துக்கும் கிடைக்காமல் இருந்திருந்திருக்கலாம். அல்லது உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார்,” என மாட் சாபு என்றும் அழைக்கப்படும் அந்த பாஸ் தலைவர் சொன்னார்.
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதை அண்மையில் பாஸ் வலியுறுத்தியது தொடர்பில் எழுந்துள்ள சர்சைக்கும் கர்பால் கலந்து கொள்ளாததற்கும் சம்பந்தம் இருக்குமா என்னும் கேள்விக்கு பதில் அளித்த மாட் சாபு “இல்லை, இல்லை” என்றார்.
பாஸ் நிகழ்வில் கர்பால் கலந்து கொள்ளாததற்கான காரணம் தெரியவில்லை என பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் யூசோப் ராவாவும் கூறினார்.
கர்பால் பாஸ் கூட்டத்தில் பங்கு கொள்ளாததற்கான காரணத்தைக் கண்டறிய அவருடன் இன்று தொடர்பு கொள்வதாக லிம் தெரிவித்தார்.
நேற்று காலையில் நிருபர் ஒருவர் தொடர்பு கொண்ட போது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஹுடுட் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதால் அந்த முக்கியமான பாஸ் நிகழ்வில் கர்பால் பங்கு கொள்ளவில்லை என பலர் சந்தேகிக்கின்றனர்.
இது போன்ற கூட்டங்களில் பக்காத்தானைப் பாதிக்கின்ற பல விஷயங்கள் பற்றி கர்பால் வெளிப்படையாகவே தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவற்றை பெரும்பாலும் மலாய் முஸ்லிம் கூட்டத்தினராக இருந்த மக்கள் வரவேற்றுள்ளனர்.
1990ம் ஆண்டுகளின் இறுதியிலிருந்து டிஏபி-யும் பாஸ் கட்சியும் உறவுகளை வலுப்படுத்திக் கொண்டது முதல் இஸ்லாமிய சட்டங்களை கர்பால் கடுமையாக எதிர்த்து வருவது ஊரறிந்த விஷயமாகும்.
முஸ்லிம் அல்லாதவர் மீது ஹுடுட் சட்டம் அமலாக்கப்பட மாட்டாது என அப்துல் ஹாடி உறுதி அளித்துள்ள போதிலும் கூட்டரசு நிலையில் அந்தச் சட்டம் அமலாக்கப்படுவதைக் காண விரும்புவதாக நிக் அஜிஸ் வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பு மீது தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாகவும் ஹுடுட் விஷயத்தில் தோழமைக் கட்சிகளின் மாறுபட்ட கருத்துக்களை மதிப்பதாகவும் கடந்த புதன் கிழமை கூடிய பக்காத்தான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
வரும் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் டிஏபி அடுத்த சில வாரங்களுக்கு தனக்கு ஏற்பட்ட பாதிப்பைச் சரிக்கட்ட போராட வேண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது.