விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால் விமானியாக மாறிய பயணி

இலண்டன்: நடு வானில் பறந்த, பயணிகள் விமானத்தில் விமானிக்கு திடீரென உடல் நலம் குன்றியதால், பயணி ஒருவர் உதவியுடன் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

அயர்லாந்து நாட்டிலிருந்து ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நோக்கி, 262 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென, சக விமானிக்கு தலைவலி ஏற்பட்டு மேற்கொண்டு பணியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

விமான ஊழியர்கள், உடனடியாக பயணிகளிடம், “மருத்துவர்கள் யாராவது இருக்கிறீர்களா?’ எனக் கேட்டனர். ஆனால், மருத்துவர்கள் யாரும் பயணிக்கவில்லை. அதிஷ்டவசமாக, அமெரிக்காவை சேர்ந்த விமானி ஒருவர் இந்த விமானத்தில் பயணித்தார்.

அவரிடம் விசாரித்ததில், அவர் அனைத்து விமானங்களையும் ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றவர், என்ற விவரம் தெரிந்தது. இதையடுத்து, அவரை விமானி அறைக்கு அழைத்து சென்று, விமானத்தை ஓட்டும் படி கேட்டுக் கொண்டனர். கேப்டன் உதவியுடன், பயணியாக வந்த விமானி, டப்ளின் நகரில் விமானத்தை தரையிறக்கினார். அங்கு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு விமானம் பிராங்க்பர்ட் நோக்கி புறப்பட்டது.