தங்க முதலீடு மோசடி தொடர்பில் பிஎன் எம்பிகள் பேங்க் நெகாராவைச் சாடினர்

இரண்டு பாரிசான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசியர்கள் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து மோசம் போவதைத் தடுக்காததற்காக பேங்க் நெகாராவைக் கடுமையான சாடினர்.

“பேங்க் நெகாராவின் கவனக் குறைவே அதற்குக் காரணம்”, என்று மக்களவையில் நிதியியல் சேவைச் சட்டத் திருத்த முன்வரைவு மீதான விவாதத்தின்போது தாஜுடின் அப்துல் ரஹ்மான் (பிஎன்-பாசிர் சாலாக்) வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அதில் பாதிக்கப்பட்டவர்கள் அத்திட்டத்தில் முதலீடு செய்தவர்கள்தான். அதில் தவறுகள் இருந்தால் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

மத்திய வங்கியைக் குறைகூறுவதில் அவருடன் தாங்கா பத்து பிஎன் எம்பி இட்ரிஸ் ஹருனும் சேர்ந்துகொண்டார்.

தங்க முதலீட்டுத் திட்டத்தில் கோளாறிருப்பதை உணர ஏன் அவ்வளவு நீண்ட காலம் பிடித்தது என்று இட்ரிஸ் வினவினார்.

நிதி நிர்வாகம் மலேசியர்களுக்கு ஒரு பிரச்னையாக உள்ளது என்றவர் குறிப்பிட்டார்.  தம் நண்பர்கள் உள்பட பலர், சந்தேகத்துக்குரிய தங்க முதலீட்டுத் திட்டங்களிலும் ஆப்ரிக்காவை மையமாகக் கொண்ட வேறு ஏமாற்றுத் திட்டங்களிலும் பணத்தைப் பறிகொடுத்துள்ளனர் என்றாரவர்.

அவர்களுக்குப் பதிலளித்த நிதி துணை அமைச்சர் டோனல்ட் லிம் (வலம்) பேங்க் நெகாரா ஏன் தாமதித்து நடவடிக்கை எடுத்தது என்பதை விளக்கினார்.

“குற்றம் நிகழ்ந்திருப்பதற்கு தெளிவான  ஆதாரங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் பேங்க் நெகாராவும் மற்ற அமலாக்க நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது. அது முறையான வணிகத்துக்கு இடையூறாக அமைந்துவிடும்.

“அவை போன்ற நிறுவனங்கள் தொடக்கத்தில் ஒழுங்காகத்தான் நடந்துகொள்கின்றன. பிறகு விரைவான ஆதாயம் பெற வழிமுறைகளை மாற்றுகின்றன அல்லது சட்டவிரோதமாக நடந்துகொள்கின்றன”, என்றார்.

TAGS: