தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு அனைவரும் பாடுபடுவோம்

-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர். நவம்பர் 27, 2012.

இவ்வாண்டு யூ.பி எஸ் ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையைப் பெற்றுள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளுக்கும், மாணவர்கள் சிறந்த தேர்ச்சி பெறக் காரணமான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளிகளின்  வாரியங்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், தமிழ்ப்பள்ளி கல்வி மேம்பாட்டுக்கு மாநில அரசுக்குத் துணையாக விளங்கிவரும் எல்லா அமைப்புகளுக்கும்  என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதலையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள்  தொடர்ந்து யூபிஎஸ்ஆர் தேர்வில் 5ஏ, 6ஏ, மற்றும் 7ஏக்களை வாங்குவதில் மட்டும் முன்னணியில்  இல்லாமல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருவது  வரவேற்கத்தக்கது.

இவ்வாண்டு யூபிஎஸ்ஆர் தேர்வில் தேசிய அளவில் எல்லாப் பாடங்களிலும் தேர்வு பெற்ற மாணவர்களின் தேர்ச்சி 0.01 விழுக்காடு சரிவு கண்டுள்ள வேளையில், மலாய் மற்றும் சீனப்பள்ளிகள் ஒரு விழுக்காட்டுக்கு மேல் முன்னேற்றம் கண்டுள்ளது. அதே வேளையில் தேசிய அளவில் தமிழ்ப்பள்ளிகளில் 16.07 விழுக்காடு சரிவு கண்டுள்ளதாகச் செய்தி வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அனைத்துப் பாடங்களிலும்  தேர்வுபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை  இவ்வாண்டு மேலும் 1.1 விழுக்காடு  அதிகரித்துள்ளது பாராட்டுக்குரியது. இருப்பினும் மலாய்க் கருத்துணர்தலில் இன்னும் அதிகச் சிரத்தை எடுக்க வேண்டும்.

கடந்த நான்கு  ஆண்டுகளாகச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வி விசயத்தில் அதிகச் சிரத்தை காட்டி வருகிறது.  பல அரசுசாரா இயக்கங்களுடன் இணைந்து தமிழ்ப்பள்ளிகளில்  மேற்கொண்டு வரும் நிகழ்ச்சிகளின் வெற்றியை  இப்பொழுது காண முடிகிறது. தமிழ்ப்பள்ளிகளில் நாம் ஆரம்பித்து வைத்த பாலர்ப்பள்ளிகளை இப்பொழுது மத்திய அரசு எல்லாப் பள்ளிகளுக்கும் விரிவு படுத்துவதைப்போல் மற்ற வசதிகளுக்கும் வழி  வகுக்க வேண்டும்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  ஊக்கத்துடன்  கல்விகற்க கணினி வகுப்புகள், பிரத்தியேக யூபிஎஸ்ஆர் வகுப்புகள், இளந்தளிர் சிறப்புகல்வி சஞ்சிகை, பாடப் பயிற்சி நூல்கள், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு ஊக்குவிப்பு மற்றும்  பயிற்சி நிகழ்ச்சிகளையும் பல அரசுசாரா இயக்கங்களுடன்  இணைந்து நடத்தி வருகிறோம்.

இப்பொழுது மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளில்  மூன்றில் ஒரு பகுதி பள்ளிகளில் கணினி வகுப்புகளை அமைத்துள்ள மாநில அரசு, அடுத்த ஆண்டில் பிரத்தியேகமாக மூன்று  மாவட்டங்களில்  உள்ள சில பள்ளிகளில் சிறப்பு கணிதப் பாடப் போதிப்பினை ஏற்பாடு செய்துள்ளதுடன், தமிழ்ப்பள்ளிகளில் அறிவியல்கூடம் அமைப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இதன் வழி மாநிலத்திலுள்ள ஒரு பகுதி தமிழ்ப்பள்ளிகளை  அனைத்துக் கல்வி போதனா வசதிகளையும் கொண்டவைகளாகத் தயார்படுத்தப்படுவதை அடுத்தகட்ட இலக்காகக் கொண்டுள்ளது.

மாநில அரசால் கட்டப்பட்ட மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபம், கணினிக்கூடம் மற்றும் அறிவியல்கூடத்திற்குத் தனித்தனி அறைகள்  அமைக்கப்பட்டது போன்ற வசதிகளை ஈஜோக்கில் கட்டப்பட்டுவரும் லாடாங் கோல்பில்ட்ஸ் தமிழ்ப்பள்ளியும் கொண்டிருக்கும். இந்த முன்னோடித் திட்டங்களை நாம் சிலாங்கூரில்  மற்றத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம் நமது பள்ளிகளை மற்ற மொழி பள்ளிகளுடன் போட்டியிடும்  ஆற்றலைக் கொண்டவையாக உருவாக்க வேண்டும் என்பதையும், நம்  மாணவர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது.

இவ்விசயத்தில் சிலாங்கூர் மாநில அரசுடன் போட்டி போட்டுக் கொண்டு, மத்திய அரசும் நாட்டிலுள்ள எல்லாத் தமிழ்ப்பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அப்படிப்பட்ட செயல்களை வரவேற்கிறோம். நமது பிள்ளைகள் வாழ்வில் சிறந்து முன்னேற கல்வியே உகந்த மூலதனம் என்பதால் தமிழ்ப்பள்ளி கல்வி விவகாரத்தில் அனைத்துச் சாரரின் ஒத்துழைப்பையும் நாம் தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்.     

இதுவரை 7ஏக்களை பெற்ற மாணவர்களின் முழு விவரங்களை  எங்களுக்கு அனுப்பி வைக்காத பள்ளிகள் விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

விவரங்களை தொலைநகல் செய்ய வேண்டிய எண் 03-55106678. மேற்கொண்டு விபரமறிய 03-55447306 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

TAGS: