கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் தமிழ் நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்படும் வீட்டில் எழுப்பப்படும் சட்ட விரோதக் கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுத்த சிப்பாங் நகராண்மைகழகத்தின் செயல்கள் மீது சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஒரு சட்டவிரோதக் கட்டுமானத்தின் மீது நடவடிக்கை எடுப்பது அந்தந்த நகராட்சிகளின் உரிமையாகும். சரியான காரணமில்லாமல் அந்நகராட்சியின் செயல்பாடுகளின் மீது மாநில அரசு தலையிடுவது முறையாகாது. பாதிக்கப் பட்டவர்கள் மாநில அரசுக்கு அது குறித்துப் புகார் கொடுத்தால் அவைகளைக் கவனிக்க மாநில அரசு தவறியதில்லை என சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.
இருப்பினும் பத்திரிக்கை செய்திகள் தவறான வியாக்கியானங்களைத் தந்து விடக்கூடாது என்பதால் கீழ்க்காணும் விளக்கத்தை அளிக்கிறோம் என்றார் அவர்.
கடந்த நவம்பர் 24 தமிழ்நேசன் பக்கம் 4ல் “வீட்டில் எழுப்பப்பட்ட சாமி மேடையைச் சிப்பாங் நகராண்மைக் கழகத்தினர் உடைத்தனர்’’ என்ற செய்தியை வாசகர்கள் மீண்டும் படிக்க வேண்டும். அந்தச் செய்தியின் அடிப்படையில், அவ்விவகாரத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமே ஒழிய, எதனையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
* உடைக்கப்பட்ட பூஜை மேடையில் இன்னும் எந்தச் சிற்பமோ அல்லது பூஜையோ, நடைபெறவில்லை, என்று வீட்டு உரிமையாளர் கோபிக்குமார் கூறியுள்ளார்.. ஆகையால் வெறும் கட்டுமானத்தை வைத்து இதனை, வழிபாட்டுத்தலம் என்ற முடிவுக்கு வரக்கூடாது. அதனை அகற்றுவதற்கு நகராண்மைக் கழகத்திற்குச் சமய ரீதியாக உரிமை இல்லை என்றும் வாதிடமுடியாது.
* அடுத்து, வீட்டு உரிமையாளருக்கு எழுத்து பூர்வமாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்கிறது தமிழ்நேசன் செய்தி. அதற்குச் சம்பந்தப்பட்டவர் எழுத்து பூர்வமான பதிலை நகராட்சிக்கு வழங்கி இருக்க வேண்டும், அதைவிடுத்து, நான் நேரடியாகப் பதில் சொன்னேன் என்று சொல்லுவதால், அவர் என்னப் பதில் வழங்கினார் என்பதனையும், அது சரியாத் தப்பா என்பதனையும் எப்படித் தீர்மானிப்பது? மேலும், இவர் என்ன விளக்கம் கொடுத்தார், எவரிடம் விளக்கம் கொடுத்தார், அந்த அதிகாரிக்கு, இவர் புகார் மீது முடிவு எடுக்க அதிகாரம் உண்டா? இல்லையா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆக, அரசாங்க விவகாரங்களில் எழுத்து பூர்வமான பதிலை வழங்கி, அதன் நகலைக் கைவசம் வைத்துக்கொள்வதே என்றும் சிறப்பு.
* மேற்படி கட்டுமானத்திற்கு வீட்டு உரிமையாளர் முறையான, கட்டுமான வரைபடத்துடன், அனுமதிக்கு நகராட்சி மன்றத்திடம் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யப்படாத எந்தக் கட்டுமானத்திற்காகவும், சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், கட்டுமானத்தை உடைக்க உத்தரவை அளிக்கவும் நகராட்சிக்கு உரிமையுண்டு என்கிறது, மலேசிய நகராட்சிமன்றங்களின் விதி.
* இங்கு மத வழிபாட்டுக்கு எந்தக் தடையோ, மத சுதந்திரத்துக்கு எந்த குந்தகமோ கிடையாது. எல்லா வீடுகளிலும் சாமி மேடைகள் உண்டு, ஆனால் வீட்டிற்க்கு வெளியில் மட்டுமல்ல வீட்டிற்குள்ளும் பெரிய அளவில் எந்த கட்டுமானத்தை எவர் மேற்கொண்டாலும் அதனை சட்டப்படி செய்யாவிட்டால், சட்டம் அதன் வேலையை செய்யும், அதற்கு சமய சாயம் பூசுவதால், செய்த தவறுகள் சரியென ஏற்றுக் கொள்ளப்படாது.
* பக்காத்தான் தலைவர்கள், நகராட்சிகளை ஆலயங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வற்புறுத்தி வருவது உண்மைதான், ஆனால் அவை சகலச் சமயத் தகுதிகளும் கொண்ட ஒரு வழிபாட்டு தலத்துக்கும், ஆகம விதிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப் பட்டவையாக இருக்கக் கூடிய ஆலயத்திற்கு மட்டுமே. அது குறித்து 7- 8- 2011 ல் சிலாங்கூர் ஷா ஆலாமில் நடைபெற்ற மாநில இந்து ஆலயங்களின் மாநாட்டில் விளக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்ட தீர்மானங்களுக்கு ஏற்பவே மாநில அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
ஆக, சம்பந்தப்பட்டவர் ஏதும் புகார் இருந்தால் எழுத்துபூர்வமாக மாநில அரசுக்குச் சமர்ப்பிக்கலாம். மேலும் பாதிக்கப்பட்டவர் போலீஸ் புகார் செய்திருப்பதால், போலீஸ் அதன் விசாரணையை நடத்த நகராட்ச்சி மன்றம் முழு ஒத்துழைப்பை வழக்க நகராட்சி மன்றம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.