அரச மலேசிய போலீஸ் படை தமது தலைமையில் இயங்கிய போது உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடமிருந்து தலையீட்டை எதிர்நோக்கியதாக முன்னாள் ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறியிருக்கிறார்.
ஒரு சமயத்தில் ஹிஷாமுடின் இளநிலை போலீஸ் அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் தலைவருக்கும் தமக்குத் தெரியாமல் உத்தரவுகளை நேரடியாகப் பிறப்பித்ததாக மூசா இன்று நிருபர்களிடம் கூறினார்.
“ஆகவே நான் 1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் பிரிவு 4 (1), போலீஸ் தளபத்தியமும் கட்டுப்பாடும் ஐஜிபி-யின் கீழ் வருகின்றது என்றும் அமைச்சரிடம் இல்லை என்றும் அவரிடம் (ஹிஷாமுடின்) தெரிவித்தேன்.”
“அவர் அமைச்சர் என்பதால் நான் அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள முடியாது. நான் அவருடன் நல்ல விதமாகப் பேசினேன். அவர் அதனை விரும்பவில்லை,” என மூசா குறிப்பிட்டார்.
நாட்டின் முதுநிலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது ஹிஷாமுடினிடமிருந்து தடைக்கல் எதனையும் அவர் எதிர்நோக்கினாரா என ஊடகங்கள் தொடுத்த கேள்விக்குப் பதில் அளித்த போது மூசா அவ்வாறு கூறினார். மூசா 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவி ஒய்வு பெற்றார்.
மலேசியக் குற்றச் செயல் கண்காணிப்புப் பணிக் குழு அந்த நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. மூசா அந்த அமைப்பின் புரவலரும் ஆலோசகரும் ஆவார்.
அந்த உரையாடலுக்கு ஹிஷாமுடின் எதிர்மறையாக நடந்து கொண்டாரா என மீண்டும் வினவப்பட்ட போது மூசா இவ்வாறு பதில் அளித்தார்: “நான் அப்படித் தான் நினைக்கிறேன். அதனால் என் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.”
விரோதம் இல்லை
இந்த விவகாரம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற விஷயமும் அல்ல. உள்துறை அமைச்சர் விரோதம் இருந்ததால் தாம் அந்த விஷயத்தை இப்போது எழுப்பவும் இல்லை என்றும் மூசா தொடர்ந்து கூறினார்.
“நான் என்னுடைய ஒய்வுக் காலத்தில் மகிழ்ச்சியாக உள்ளேன். போலீஸ் படையை நடத்த மற்றவர்களை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள். ஆனால் அதனை முறையாகச் செய்யுங்கள். இந்த நாடு, மக்கள், சமூகம் ஆகியவற்றின் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளுங்கள். அது தான் மிகவும் முக்கியம்,” என்றார் மூசா.
என்றாலும் குறிப்பிட்ட ஒர் அமைச்சர் (மறைமுகமாக ஹிஷாமுடின்) இன்னும் ஐஜிபி-யை புறந்தள்ளி விட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனத் தெரிவித்த மூசா அந்த அமைச்சரை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகள் அடிப்படையில் தாம் அவ்வாறு சொல்வதாகத் தெரிவித்தார்.