போலீஸ் தடுப்புக் காவல் கைதி தார்மிஸி இட்ரிஸ் செபெராங் ஜெயாவில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட போது போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக அவரது தாயார் கூறிக் கொண்டுள்ளார்.
தார்மிஸி தற்போது மருத்துவச் சோதனைக்காக புக்கிட் மெர்டாஜாம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இன்று தாம் தமது புதல்வரைப் பார்த்த போது அவரது உடம்பில் பல பகுதிகளில் சிராய்ப்புக்களைக் கண்டதாக கூறி 54 வயதான ஸாலிடா சே மாட் புகார் செய்துள்ளார்.
தமது புதல்வருக்கு முழு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது அவர் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவது மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“அவரது முகத்தில், வயிற்றில், கழுத்தில் தாம் சிராய்ப்புக்களை நான் பார்த்தேன். அவருக்கு லேசாகக் காய்ச்சலும் இருந்தது. அவருக்கு வலியும் இருந்தது,” என ஸாபிடா சொன்னார்.
தார்மிஸி தடுத்து வைக்கப்பட்டுள்ள செபெராங் பிராய் தெங்கா போலீஸ் தலைமையகத்தில் அவரை நிருபர்கள் சந்தித்தனர்.
“நான் அவரைப் பற்றிப் பெரிதும் கவலைப்படுகிறேன். அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
தமது புதல்வரைக் கைது செய்ய 10க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் வந்ததாக கூறிக் கொண்ட ஸாபிடா, தமது புதல்வர் எந்தக் குற்றத்தைப் புரிந்துள்ளார் என்பது தமக்கு இன்னும் தெரியாது என்றார்.
அவரது புகார் பிற்பகல் 2 மணி வாக்கில் பதிவு செய்யப்பட்டது. சுல்பிஹார் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட புலனாய்வு அதிகாரியிடம் தமது வாக்குமூலத்தைப் பின்னர் பதிவு செய்ததாக அவர் சொன்னார்.
“அந்தப் புலனாய்வு அதிகாரி என்ன சொல்கிறார் என்பதே எனக்கு உண்மையில் புரியவில்லை. பின்னர் அவர் என்னை ஒர் அறிக்கையில் கையெழுத்திடச் செய்தார்,” என ஸாபிடா தெரிவித்தார். அந்த நேரத்தில் அவருடன் எந்த வழக்குரைஞரும் இல்லை.
இதனிடையே தாம் தார்மிஸியின் நிலைமையை அறிந்து கொள்ள மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அந்த விவகாரம் மீது தொடர்ந்து ஸாபிடாவுக்குத் தகவல் கொடுக்கப் போவதாகவும் சுல்பிஹார் உறுதி அளித்தார்.
மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் தோட்டக்காரராக வேலை செய்யும் 25 வயது தார்மிஸியை செபெராங் ஜெயா, சிக்காப்பில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் திங்கட்கிழமை இரவு 7.30 வாக்கில் போலீசார் கைது செய்தனர். அவரை போலீஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரிக்கிறது.
இன்னொரு தடுப்புக் காவல் கைதி துன்புறுத்தப்பட்ட சம்பவம் ?
போலீஸ் அதிகாரி ஒருவர் தமது கடமைகளைச் செய்வதற்கு குந்தகமாக இருந்ததுடன் எதிர்ப்பும் தெரிவித்ததற்காகவும் தார்மிஸி விசாரிக்கப்படுவதாக பினாங்கு சுவாராம் ஒருங்கிணைப்பாளர் சியான் ஹோ கூறிக் கொண்டுள்ளார்.
ஹோட்டல் ஊழியரான ஸாப்ரி பாஹாரி என்ற தமது இன்னொரு நண்பருடன் தார்மிஸி கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார். தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவரையும் பல போலீஸ்காரர்கள் துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
ஸாபிடா வாக்குமூலம் அளித்த போது அவருடன் செல்வதற்குத் தாம் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஹோ சொன்னார்.
ஹோவுடன் சமூகப் போராளியான டாக்டர் கிம் பா-வும் சென்றிருந்தார். தாயாரின் வேண்டுகோளைத் தொடர்ந்து தார்மிஸியை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசாரை அவர் பாராட்டினார்.
“என்றாலும் புகார் செய்வதில் தாம் சிரமங்களை எதிர்நோக்குவதாக ஸாபிடா தெரிவித்த பின்னர் போலீசார் என்னை அழைத்து அவருக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்,” என்றார் அவர்.
“ஸாபிடாவின் புகாரை ஏற்றுக் கொண்ட அதிகாரியும் புலனாய்வு அதிகாரியும் தொழில் ரீதியாக நடந்து கொண்டதற்காக மிகவும் பாராட்டப்பட வேண்டும்.”