பினாங்கு டிஏபி மாநாடும் பொதுத் தேர்தல் பற்றிக் கவனம் செலுத்துகின்றது

டிசம்பர் மாத மத்தியில் டிஏபி தேசியப் பேரவை நடத்தப்படவிருக்கின்றது. அதற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் வேளையில் அந்தக் கட்சியின் பினாங்கு மாநில மாநாடு வரும் ஞாயிற்றுக் கிழமை தொடங்குகிறது.

புத்ராஜெயாவை பிஎன் -னிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் இலட்சியத்துடன் டிஏபி பேராளர்கள் பினாங்குக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்

“பினாங்கிலிருந்து புத்ராஜெயாவை நோக்கி முன்னேறுவோம் என்பது இவ்வாண்டுக்கான கருப்பொருளாகும். காரணம் 13வது பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி மாநாடு இதுவாகும்,” என்று மாநில டிஏபி செயலாலர் இங் வெய் எய்க் கூறினார்.

“எங்கள் விவாதம் தேர்தல் பிரச்னைகள் மீது கவனம் செலுத்தும். தனது எல்லா எம்பி-க்களையும் 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என டிஏபி நம்புகின்றது. நாங்கள் அவர்களில் யாரையும் இழக்க விரும்பவில்லை. எங்கள் மாநாட்டுக்கு பாஸ், பிகேஆர் பேராளர்களையும் நாங்கள் அழைப்போம்,” என இங் மேலும் சொன்னார்.

பினாங்கு மாநிலத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கு “3-3-3-1 வழிமுறையை” பிஎன் அறிவித்துள்ளதால் டிஏபி வரும் தேர்தலைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட 12 இடங்கள் “அபாயகரமான தொகுதிகள்” என்பதும் டிஏபி-க்கு நன்கு தெரியும்.”

அடுத்த மே மாதத்திற்குள் 13வது பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதால் இவ்வாண்டுக்கான டிஏபி பினாங்கு மாநில மாநாடு அவ்வளவு பரபரப்பாக இருக்காது எனக் கருதப்படுகின்றது.

‘வாண வேடிக்கைகளுக்கு’ அவர் தயாராக இருக்கிறாரா என்றும் இங்-கிடம் வினவப்பட்டது. பேராளர்களுடைய பேச்சுச் சுதந்திரத்தை கட்சி மதிப்பதாக அவர் அதற்குப் பதில் அளித்தார்.

“அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர்கள் கவனம் பொதுத் தேர்தல் மீது இருக்கும் என நான் நம்புகிறேன், அதற்குத் தான் முன்னுரிமை,” என்றார் அவர்.

கடந்த ஆண்டு கட்சியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்-கிற்கும் மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் “ஞானத் தந்தையும் ஜமீன்தாரும்” என்ற சர்ச்சை தொடங்கியதால் மாநில டிஏபி மாநாடு குழப்பத்துடன் நடைபெற்றது.

TAGS: