போலீஸ் படை, களத்தில் அரசியல் தலையீட்டை எதிர்நோக்குகிறது என முன்னாள் ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் சொன்னது மீது கருத்துக் கூற நடப்பு ஐஜிபி இஸ்மாயில் ஒமார் மறுத்துள்ளார்.
“முக்கியமில்லாத விஷயங்கள் மீது என் கவனத்தை செலுத்த நான் விரும்பவில்லை,” என இஸ்மாயில் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் கூறினார்.
“என்னைப் பொறுத்த வரையில் நான் உங்களுக்குச் சிறந்த சேவையை கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குற்றம் தொடர்பான அச்சத்தைக் குறைக்க நான் ஈடுபாடு கொள்வேன். மூன்றாவதாக நான் பொதுத் தேர்தலுக்கு ஆயத்தம் செய்ய விரும்புகிறேன்.”
மேலும் நெருக்கப்பட்ட போது, தாம் கவனிக்க வேண்டிய பல அவசர விவகாரங்கள் இருப்பதாகவும் மூசா -வின் குற்றச்சாட்டுக்கள் ‘உண்மையில்லாதவை’ என்றும் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
“அது தான் என் பதில். நீங்கள் விளக்கம் சொல்லிக் கொள்ளலாம். எனக்கு முக்கியம் இல்லாத விஷயங்களைக் கவனிக்க எனக்கு நேரமில்லை என்பதே என் பதில்,” என்றார் ஐஜிபி.
நேற்று தமது நிர்வாகமும் இஸ்மாயில் நிர்வாகமும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் உட்பட பலரது அரசியல் தலையீட்டை எதிர்நோக்கியதாக மூசா பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.
அந்த உத்தரவுகள் சட்ட விரோதமாக இருந்தால் தாம் அவற்றுக்கு இணங்க மறுத்ததாகவும் மூசா தெரிவித்தார். உள்துறை அமைச்சருடன் ‘கடுமையாக’ நடந்து கொள்ளுமாறும் அவர் இஸ்மாயிலைக் கேட்டுக் கொண்டார்.