நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்; 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில், 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமெரிக்க அரசியலில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 17-ம் தேதி முதல், “வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம்” தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஜுகோட்டி பூங்காவில், வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள், கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 25-ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், 80 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் காவல்துறையினர் வரையறையின்றி நடந்து கொள்வதைக் கண்டித்தும் நேற்று முன்தினம் மன்ஹாட்டனில் உள்ள ப்ரூக்ளின் பாலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலத்தின் நடைபாதையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்த போதிலும் கூட்டம் அதிகரித்ததால் மக்கள் போக்குவரத்துப் பாதையில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால், அப்பாலத்தில் போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் 700க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களில், பெரும்பாலானோர் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.