தேர்தல் சீர்திருத்தங்களை ஆய்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க வகை செய்யும் மசோதாவை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பித்தது.
அத்துடன் வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டத்தையும் அப்புறப்படுத்தும் சட்டத்தையும் ரத்துச் செய்வதற்கான மசோதாக்களையும் முன்மொழிந்தது.
அவசர காலச் சட்டங்களை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை முதல் வாசிப்புக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று காலை தாக்கல் செய்தார். மலேசியாவில் உலகில் சிறந்த ஜனநாயகமாகத் திகழச் செய்யப் போவதாக கடந்த மாதம் அவர் வாக்குறுதி அளித்தார்.
அதே வேளையில் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பதற்கான மசோதாவைப் பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் சமர்பித்தார்.
அந்தக் குழு மொத்தம் 9 எம்பி-க்கள் இடம் பெற்றிருப்பர். அவர்களில் ஐவர் பிஎன் எம்பி-க்கள், மூவர் பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள், ஒருவர் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்.
தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கான யோசனைகளை வழங்குவதற்கு அந்தக் குழுவுக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 54 ஆண்டுகளாக தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடத்து வந்துள்ளது என்றும் “நம்பிக்கையான தேர்தல்களை” உறுதி செய்வதில் அது சிறந்த அமைப்பாக தன்னை மெய்பித்துக் கொண்டுள்ளது என்வும் நஸ்ரி சொன்னார்.
என்றாலும் தேர்தல்கள் நடத்தப்படும் முறையை சீர்திருத்த வேண்டும் என மக்கள் விரும்பினால் அதற்கான சட்டங்களையும் விதிகளையும் திருத்துவது சட்டமியற்றுவோரின் கடமையாகும் என சட்டத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான அவர் குறிப்பிட்டார்.
“நடப்பு நடைமுறைகள் இன்னும் பொருத்தமானவை என்றும் அவை தொடர்ந்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கருதுகிறது.”
“எனினும் தனது பணிகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்படுவதற்காக தனது நிர்வாக நடைமுறைகளை மாற்றிக் கொள்ளத் தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்பது அதுன் பொருள் அல்ல,” என்றார் நஸ்ரி.
விவேகமான நடவடிக்கை
தேர்தல் ஆணையம் இனிமேல் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தபடாமல் இருப்பதற்காக அரசாங்கம் அந்தக் குழுவை அமைக்க முடிவு செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0 ஜுலை 9ம் தேதி பேரணி ஒன்றை நடத்திய பின்னர் நடப்புத் தேர்தல் முறையின் நம்பகத்தன்மை மீது பெரும் சர்ச்சை மூண்டது. கோலாலம்பூரில் நிகழ்ந்த அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
நடப்பு தேர்தல் முறை ஜனநாயகமாகவும் வெளிப்படையாகவும் நியாயமானதாகவும் இல்லை என பொறுப்பற்ற தரப்புக்கள் சாட்டிய குற்றச்சாட்டுக்களைப் போக்குவதற்காக நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைப்பது என்ற விவேகமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் நஸ்ரி சொன்னார்.
அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பதற்கு சமமான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் நஸ்ரி உறுதி அளித்தார்.
அந்தக் குழுவை அமைப்பதா இல்லையா என்பது மீது அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து அவசர காலச் சட்டங்களை அகற்றுவது தொடர்பில் நஜிப் சமர்பித்த பிரேரணை மீது விவாதம் நடைபெறும்.
1933ம் ஆண்டுக்கான வசிப்பிடக் கட்டுப்பாட்டுச் சட்டமும் 1959ம் ஆண்டுக்கான அப்புறப்படுத்தும் சட்டமும் விசாரணையில்லாமல் ஒருவருடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த வகை செய்கிறது.
என்றாலும் இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவசர காலம் சம்பந்தப்பட்ட மூன்று சட்டங்களையும் ரத்துச் செய்து பற்றி இன்று மக்களவையில் பேசப்படவில்லை.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிய வருகிறது. இசா-வுக்குப் பதில் இரண்டு புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதே அதற்குக் காரணம்.
1967ம் ஆண்டுக்கான போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவை திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் அடுத்த மாதம் தாக்கல் செய்யும் என்றும் நஜிப் கடந்த வாரம் அறிவித்தார். அது ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் சம்பந்தப்பட்டதாகும்.