லைனாஸ் அரிய மண் உற்பத்தியைத் தொடங்குகின்றது; அதன் பங்கு விலைகள் ஏறுகின்றன

குவாந்தான் கெபெங்கில் அரிய மண் உற்பத்தியை ஆஸ்திரேலியாவின் லைனாஸ் நிறுவனம் இன்று  தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அதன் பங்கு விலைகள் 6 விழுக்காடு வரையில் ஏற்றம் கண்டன.

லைனாஸ் அரிய மண் தொழிற்கூடத்தில்  (Lamp) நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என லைனாஸ் அறிவித்தது.

“மலேசியாவில் Lamp நடவடிக்கைகள் நனவாகி விட்டன. அது எங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்,” என லைனாஸ் நிர்வாகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் விடுத்த அறிக்கை கூறியது.

அந்த தொழிற்கூடத்தின் வர்த்தக ரீதியான விற்பனை தொடங்க இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

800 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள அந்தத் தொழிற்கூடம் சீனாவுக்கு வெளியில் மிகப் பெரியதாகும். அது மே மாதமே நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்க வேண்டும். சுற்றுச்சூழல், பாதுகாப்பு சர்ச்சைகளினால் அதன் நடவடிக்கைகள் தாமதமடைந்தன.

லைனாஸ் பங்குகள் இன்று காலை 4.4 விழுக்காடு அதிகரித்து 0.71 அமெரிக்க டாலராக இருந்தது. என்றாலும் அது இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்த 1.50 அமெரிக்க டாலரை விடக் குறைவாகும்.

இதனிடையே காற்று, தண்ணீர் தரம் குறித்த நடப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்காக அந்தத் தொழிற்கூடத்தின் நுழைவாயிலில் மின்னியல் காட்சிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக லைனாஸின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

“நமது உள்ளூர் சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அந்தத் தொழிற்கூடம் பாதுகாப்பானது என உறுதி அளிப்பதே அதன் நோக்கம்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

TAGS: