கிளந்தான் சீனர் சங்கங்களின் பேராளர்கள் நேற்று மாநில அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து இருபாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீதான சர்ச்சைக்குரிய தனது விதிமுறைகளை கோத்தா பாரு நகராட்சி மன்றம் தளர்த்தும் என அந்தப் பேராளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
அந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது என்றும் தங்களது பரிந்துரைகளை பரிசீலிக்க மாநில அரசு வாக்குறுதி அளித்தது என்றும் கிளந்தான் சீனர் வர்த்தகர் சங்கத் தலைஅவர் கோ தீ சியூ கூறினார்.
“முடி திருத்தும் பெண்கள் ஆண் வாடிக்கையாளர்களுடைய முடியை வெட்டுவதற்கும் முடி திருத்தும் ஆண்கள் பெண் வாடிக்கையாளர்களுடைய முடியை வெட்டுவதற்கும் தடை விதிக்கும் விதிகளை தளர்த்துமாறு நாங்கள் மாநில அரசைக் கேட்டுக் கொண்டோம்.”
“அவர்கள் இன்னும் எங்களுடைய கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இன்னும் சரி எனச் சொல்லவில்லை. ஆனால் அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம்,” என கோ தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
சீனர் சங்கங்களைச் சந்தித்த மாநில அரசுக் குழுவில் ஆட்சி மன்ற உறுப்பினர்களான தாக்கியூடின் ஹசானும் முகமட் பாட்சில் ஹசானும் இடம் பெற்றிருந்தனர்.
முடிவு விரைவில்
அந்த விவகாரம் மீது மாநில ஆட்சிமன்றத்துக்கு அந்த இரு ஆட்சி மன்ற உறுப்பினர்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதால் சந்திப்பு குறித்து மேல் விவரங்களைத் தர கோ மறுத்து விட்டார்.
இதனிடையே சீனர் சங்கங்கள் தெரிவித்த யோசனைகளை மாநில அரசாங்கம் வரவேற்பதாக தாக்கியூடின் தெரிவித்தார் என ஹாராக்கா டெய்லி அறிவித்துள்ளது.
“மாநில அரசாங்கம் விரைவில் முடிவு எடுக்கும் நான் நம்புகிறேன். அந்த முடிவு எல்லாத் தரப்புக்களுடைய நலன்களையும் கருத்தில் கொண்டிருக்கும்,” என்றார் அவர்.
முஸ்லிம் அல்லாத ஆண் வாடிக்கையாளருடைய முடியை வெட்டியதற்காக முடி திருத்தும் பெண் ஒருவருக்கு கோத்தா பாரு நகராட்சி மன்றம் குற்றப்பதிவை வழங்கியதாக செய்தி வெளியான பின்னர் இருபாலர் முடி திருத்தும் நிலையங்களில் விதிகள் கடுமையாக அமலாக்கப்படுவது மீது சர்ச்சை எழுந்தது.