வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட, குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னிக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகையில் நேற்று விருந்தளித்தார். அமெரிக்க அதிபர் தேர்தல், 6–ஆம் தேதி நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஒபாமா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் முன்னாள் கவர்னர், மிட் ரோம்னி பல மாகாணங்களில் வெற்றி பெற்ற போதிலும், ஓட்டு எண்ணிக்கையின் அடிப்படையில் தோல்வியை தழுவினார். அமெரிக்க பார்லிமென்டின் மேல் சபையில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர்.
பிரதிநிதிகள் சபையில், ரோம்னியின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் தான் அதிகம் உள்ளனர். எனவே, அதிபராக ஒபாமா மீண்டும் தேர்வு செய்யப்பட்டாலும் பல திட்டங்களை பார்லிமென்ட்டின் ஒப்புதலோடு நிறைவேற்ற எதிர்கட்சியினரின் ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது, ஒபாமாவும், ரோம்னியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசினர்.
இருப்பினும், தேர்தலுக்கு பிறகு ரோம்னியின் ஒத்துழைப்பு தேவைப்படுவதால் அதிபர் ஒபாமா, மிட் ரோம்னியை அழைத்து தன்னுடைய மாளிகையில் நேற்று விருந்தளித்தார். தன்னுடைய ஆட்சியில் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும்படி ரோம்னியிடம் கேட்டுக் கொண்டார் ஒபாமா.