2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி தைப்பான் -யூஎஸ்ஜே போலீஸ் நிலையத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்ட ஏ குகனின் உடலில் இருந்த காயங்களை டி9 (கடும் குற்றங்கள்) பிரிவைச் சார்ந்தவர்கள் ஏற்படுத்தினர் என்பதை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
என்றாலும் குகனைத் தாக்கியதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயரையோ அல்லது பதவிகளையோ சுபாங் ஜெயா சிஐடி பிரிவில் பணியாற்றும் 56 வயது லோ வூன் சாய் கூறவில்லை.
“அந்தக் காயங்களை ஏற்படுத்தியதில் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம்,” என லோ நேற்று கூறினார்.
அவர், போலீசாருக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக குகனின் தாயார் என் இந்திரா தொடுத்துள்ள 100 மில்லியன் ரிங்கிட் வழக்கில் அவரது சார்பில் ஆஜரான ஆர். சிவராசா கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
குகன் மரணம் தொடர்பில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி இந்திரா வழக்கைச் சமர்பித்தார். அதில் முன்னாள் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவரும் நடப்பு தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவருமான காலித் அபு பாக்கார், கான்ஸ்டபிள் வி நவீந்திரன், முன்னாள் சுபாங் ஜெயா ஒசிபிடி காலஞ்சென்ற ஜைனல் ரஷிட் அபு பாக்கார், தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி), அரசாங்கம் ஆகிய தரப்புக்களை பிரதிவாதிகளாக இந்திரா பெயர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேது குகன் இறந்த தைப்பான் போலீஸ் நிலையத்தில் லோ மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அந்த சம்பவத்துக்குப் பின்னர் அவருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுக்கப்பட்டது.