‘பிகேஆர் ஏன் இப்போது முன்னாள் ஐஜிபி-உடன் கை கோர்க்கிறது ?’

பிகேஆர் தனது முன்னாள் எதிரியான முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானுடன் ‘கை கோர்ப்பதாக’ குற்றம் சாட்டி அதனை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங் சாடியிருக்கிறார்.

MyWatch என்ற குற்றச் செயல் கண்காணிப்பு அமைப்பு (ஒர் அரசு சாரா அமைப்பு) ஏற்பாடு செய்த நிருபர்கள் சந்திப்பில் மூசா விடுத்த அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.

“மூசாவுக்கு ‘பிகேஆர் ஆதரவு’ அளிப்பதாக நம்புவதாகக் கூறிய அவர், ரிபார்மஸி இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூசா என்பதை பிகேஆர்-கட்சிக்கு நினைவுபடுத்தினார்.

“மூசாவுக்கு பிகேஆர் ஆதரவு அளித்தால் நான் மிகவும் ஏமாற்றமடைந்து பிகேஆர் விரக்தி அடைந்துள்ள கட்சி என நான் கூறுவேன்,” என்றார் பாங்.

“அன்வாருடைய ‘கறுத்த கண்’ சம்பவத்துக்குப் பின்னரே பிகேஆர் உதயமானது என்பதை நான் அதற்கு நினைவுபடுத்துகிறேன். அப்போதைய ஐஜிபி ரஹிம் நோர் அன்வாரை கண்ணில் குத்தி நன்றாக அடித்துள்ள வேளையில் அன்வார் இப்ராஹிமின் காயங்கள் சுயமாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவை எனக் கூறும் பொருட்டு மூசாவும் சட்டத்துறைத் தலைவர் கனி பட்டெய்லும் மருத்துவ அறிக்கைகளை ஜோடித்ததை பிகேஆர் மறந்து விட்டதா ?,” இன்று விடுத்த ஒர் அறிக்கையில் பாங் வினவினார்.

அந்த பிகேஆர் மூத்த தலைவருக்கு எதிராக சுமத்தப்பட்ட முதல் குதப்புணர்ச்சி வழக்கில் மூசா முக்கியமானவர் என்பதையும் அவர் பிகேஆர்-க்கு நினைவுபடுத்தினார்.

“மெத்தையில் அன்வாருடைய விந்துவை வைத்து அந்த மெத்தையை தூக்கிச் சென்றவர் மூசா என்பதையும் பிகேஆர் மறந்து விட்டதா ?”

“திவோலி விலாஸ்-ஸிலும் பிஜே ஹில்டனிலும் ஒட்டுநரான அஜிஸான் குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டதாக கதைகளை ஜோடித்த புலனாய்வு அதிகாரி இதே மூசா ஹசான் தான். அப்போது அந்த திவோலி விலாஸ் தயாராகக் கூட இல்லை ?”

பிகேஆர் கொள்கையில்லாதது

“குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் முக்கியப் பாத்திரம்” மூசா எனக் குறிப்பிட்ட பாங், பிஎன் -னைத்  தாக்குவதற்காக அவரைத் தங்கள் தரப்பு பக்கம் சேர்க்கும் பிகேஆர் கொள்கை இல்லாத கட்சி எனச் சாடினார்.

“ஆகவே தந்திரமான மனிதர் ஒருவருடன் கை கோர்ப்பதும் அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதும் பிகேஆர் தலைமைத்துவத்திற்கு எந்தக் கொள்கையும் இல்லை என்றே பொருள்படும். அந்தப் பசுத் தோல் போர்த்திய புலியிடமிருந்து விலகியிருக்குமாறு நான் பிகேஆர்-கட்சிக்கு யோசனை சொல்வேன்.”

“ஒரு காலத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஒருவர் இப்போது அரசாங்கத்தை தீயது எனத் தாக்குகிறார் எனக் கேளுங்கள். பிகேஆர் தொடர்ந்து அந்த தீய மனிதருக்கு ஆதரவு அளித்தால் பிஎன் அரசாங்கத்தைக் கீழறுப்புச் செய்யும் பொருட்டு இவ்வளவு தாழ்ந்து போனதற்காக பொது மக்களுடைய ஆதரவை பிகேஆர் இழக்க நேரிடும்,” என்றார் அவர்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு எதிராக மூசா தொடுத்துள்ள தாக்குதல்களுக்கு அம்னோ பின்னணியில் இருப்பதாகவும் பாங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரம் அம்னோ ஆண்டு பொதுக் கூட்டம் நிகழும் வேளையில் வணிகர் தீபக் ஜெய்கிஷன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக வெளியிட்ட தகவல்களுடன் இணையும் வகையில் மூசாவின் குற்றச்சாட்டுக்கள் “மிகவும் கவனமாக” திட்டமிடப்பட்டுள்ளன என்றும் பாங் அதில் தெரிவித்தார்.

“துணிச்சலாக இருமுனைத் தாக்குதல்கள் அம்னோ கட்சிக்குள்ளிருந்து கிடைத்த ஆதரவுடன் தான் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். அம்னோவுக்குள் நிகழும் உட்பூசல் பற்றி நான் தொட விரும்பவில்லை. அந்த கட்சி உள் விவகாரத்தை அம்னோ தலைவர் தீர்ப்பதற்கு விட்டு விட வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘நன்றி இல்லாதவர்’, ‘விசுவாச உணர்வே இல்லாதவர்’ என்றும் மூசாவைச் சாடிய பாங், அரசியல் தலைமைத்துவம் அந்த முன்னாள் ஐஜிபி-க்கு எதிராக கூறப்பட்டுள்ள எல்லா குற்றச்சாட்டுக்களையும் விசாரிப்பதற்கு ‘மாட்டைக் கொம்பில் பிடிப்பது’ போல மூசா-வை பிடிக்குமாறு’  அவர் ‘அரசியல் தலைமைத்துவதற்கு வேண்டுகோள் விடுத்தார்.

“அரச விசாரணை ஆணயத்தை அமையுங்கள். எல்லாக் குற்றச்சாட்டுக்களுக்கும் அந்த இரட்டை முக மோசடிக்காரரைப் பொறுப்பேற்கச் செய்யுங்கள். இனத் துரோகி என அவர் விமர்சிக்கப்படட்டும்,” என்றார் பாங்.

இந்த வாரத் தொடக்கத்தில் நடத்திய நிருபர்கள் சந்திப்பில் மை வாட்ச் அமைப்பின் புரவலருமான மூசா தமது கண்காணிப்பில் போலீஸ் படை இருந்த போது போலீஸ் விவகாரங்களில் ஹிஷாமுடின் தலையிட்டதாக கூறிக் கொண்டார்.

TAGS: