புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் போது மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழப்பர் என்னும் தோற்றத்தை அளிப்பதற்கு அம்னோ முயலுவதை அதன் அண்மைய ஆண்டுப் பொதுக் கூட்டம் உணர்த்துவதை டிஏபி உறுப்பினர்கள் அறிந்திருக்க வேண்டும் என பினாங்கு மாநில டிஏபி தலைவர் சாவ் கோன் இயாவ் கூறியுள்ளார்.
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் பக்காதான் ஆட்சிக்கு வந்தாலும் அதிகாரம் தொடர்ந்து மலாய்க்காரர்களிடமே இருக்கும் என அவர் டிஏபி பினாங்கு மாநில மாநாட்டில் பேசி அந்த அச்சத்தைப் போக்கினார்.
“தாங்கள் கடும் எதிர்ப்பை எதிர்நோக்குவதை அம்னோ/பிஎன் அறிந்துள்ளன. பக்காத்தானுடன் மோதுவதற்கு ஒர் அரங்கமாக அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டம் பயன்படுத்தப்பட்டது. அவர்கள் பக்காத்தானைத் தாக்க மலாய் உரிமைகளைப் பயன்படுத்தினார்கள்,” என்றார் சாவ்.
“மே 13 பற்றி பேசப்பட்டு மலாய்க்காரர்கள் மீண்டும் மருட்டப்பட்டனர். மலாய்க்காரர்கள் தங்கள் சொந்த மண்ணில் அதிகாரத்தை இழக்க மாட்டார்கள் என நாங்கள் உறுதி கூற விரும்புகிறோம். ஆனால் அம்னோ அதிகாரத்தை இழக்கும்,” என்றும் அவர் சொன்னார். அப்போது பேராளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
“மலாய்க்காரர்களுடைய உரிமைகளையும் நலன்களையும் பாஸ், பிகேஆர், டிஏபி ஆகியவை பிரதிநிதிக்க முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.
அந்த மாநாட்டின் இவ்வாண்டுக்கான கருப்பொருள் பினாங்கிலிருந்து புத்ராஜெயாவை நோக்கி என்பதாகும்.
13வது பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி பினாங்கு டிஏபி மாநாடு இதுவாகும். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.