லண்டன் : செவ்வாய் கிரகத்தில், 80 ஆயிரம் பேரை குடியேற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. இந்த சிவப்பு நிற கிரகத்தில், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் குறித்து, அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்டில் தரையிறங்கியது. ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, ‘கியூரியாசிட்டி’ என்ற ரோபோ வாகனம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை குறித்து, ஆராய்ந்து வருகிறது.
அமெரிக்காவின், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு விண்கலங்களை அனுப்பி வருகிறது.தற்போது இந்த நிறுவனம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் கூறியதாவது:செவ்வாய் கிரகத்துக்கு முதல் கட்டமாக, 10 பேரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதற்கு கட்டணமாக தலா, 2.5 கோடி ரூபாய் வரை வசூலிக்க உள்ளோம். இருபது ஆண்டுகளில், 80 ஆயிரம் பேரை குடியேற்ற திட்டமிட்டுள்ளோம்.
சூரிய ஒளி தாக்காத வகையில் வீடுகளை அமைத்தல், பிராண வாயுவை உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை கண்டுபிடித்து, குடிதண்ணீராக பயன்படுத்துதல் போன்ற பணிகளை செய்ய வேண்டி உள்ளது.பயணிகளை அழைத்துச் செல்ல, “பால்கன் – 9′ ரக விண்கலத்தை பயன்படுத்துவோம்.இவ்வாறு எலோன் மஸ்க் கூறினார்.