அம்னோ தலைவர்களுக்கு எதிராக அண்மையில் முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசானும் வணிகர் தீபக் ஜெய்கிஷனும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கூறப்படுவதை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று மறுத்துள்ளார்.
“அவ்வாறு கூறப்படுவதற்கு ஆதாரமே இல்லை. நான் மூசாவைச் சந்தித்தேனா ? இல்லவே இல்லை. அவர் எனக்கு எதிரான சிவில் வழக்கை மீட்டுக் கொண்டதைத் தவிர வேறு ஏதுமில்லை…. பிகேஆர்-ரில் இணைய விரும்புவதாக அவர் கோடி காட்டினாரா ? இல்லை. அவர் அப்படிக் கோடி காட்டினால் ? நான் அது பற்றிச் சிந்திப்பேன்.”
“ஆனால் அந்த எண்ணமே பொருத்தமற்றது. பக்காத்தான் ராக்யாட் மீது பழி போடுவது நியாயமல்ல. ஏனெனில் நான் அவரிடமிருந்து எதுவும் கேள்விப்படவும் வில்லை, அரசியலில் தமக்கு ஆர்வம் இருப்பதாக அவரும் சொல்லவில்லை,” என்றார் அன்வார்.
தீபக் பற்றிக் குறிப்பிட்ட அவர், சிலாங்கூர் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவி ராஜா ரோபியா ராஜா அப்துல்லா சம்பந்தப்பட்ட தீபக்-கின் நிலத் தகராறு வழக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்டுள்ளதாக தீபக் கூறுவதும் அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்ட நேரத்தின் போது தற்செயலாக நிகழ்ந்தவை என்றார் அன்வார்.
“அவர் நீதிமன்றத்தில் தம்மைத் தற்காத்துக் கொள்ள விரும்பினார். பிரதமருக்கும் அவரது மனைவிக்கும் பணம் மாற்றி விடப்பட்டதாக அவர் கூறிக் கொண்டார். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?,” என அன்வார் வினவினார்.
அம்னோ பேராளர்கள் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கவனம் செலுத்துவதை திசை திருப்புவதற்காக அம்னோ தலைவர்கள் மீது கூறப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சிகள் தூண்டி விட்டவை என கடந்த வாரம் அம்னோ உதவித் தலைவர்களான ஷாபியி அப்டாலும் ஹிஷாமுடின் ஹுசேனும் கூறிக் கொண்டிருந்தனர்.