சாமிவேலுக்கு சிலாங்கூர் பக்காத்தானைக் குறைசொல்ல கொஞ்சமும் தகுதி இல்லை

மனோகரன் மலையாளம்

அண்மைக்காலமாக, மஇகா முன்னாள் தலைவர் சாமிவேலு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பொருளாதார உருமாற்றத் திட்டங்களைப் புகழ்வதையும் சிலாங்கூர் பக்காத்தான் மாநில அரசு எதையும் சாதிக்கவில்லை என்று குறைகூறுவதையும் பார்க்கிறோம்.

பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மஇகாவின் அம்முன்னாள் தலைவரும் தவறாமல் செல்கிறார்.

அந்த வகையில், மஇகா தலைவர் ஜி.பழனிவேல் கட்சிக்குள்ளும் வெளியிலும் பலவீனமடைந்திருக்கிறார் என்று அரசல் புரசலாகப் பேசப்படுகிறது.

எனவேதான், அம்னோவின் நம்பிக்கைக்குரிய அடிவருடி, தேர்தலில் பிஎன்/மஇகாவின் வாய்ப்புகளை அதிகரிக்க கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறார்.

மதிப்பிழந்த சாமிவேலுவை நம்ப வேண்டிய ஒரு நிலைக்கு நஜிப் தள்ளப்பட்டிருப்பதை வைத்தே எப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய நிலையில் பிஎன்/மஇகா இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அவருடைய காலத்தில் மலேசியாவில் இந்தியர்கள் எல்லாத் துறைகளிலும் முற்றாக ஓரங்கட்டப்பட்டிருந்ததை நன்றாகவே அறிவோம்.

குற்றச்செயல் விகிதம் பல்கிப் பெருகியது; தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டு சீரழிந்து கொண்டிருந்தன; இந்து ஆலயங்களை உடைப்பது பரவலாக இருந்தது; அரசாங்க வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வந்தது; வியாபாரத்துக்கு மூலதனம் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருந்தது.

முன் எப்போதுமில்லாத ஒதுக்கீடுகள்

அதற்கு மாறாக, சிலாங்கூரில் இந்தியர்களுக்காக பக்காத்தான் செய்துள்ள உதவிகள் அளப்பரியவை.

முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரிம4மில்லியனும் இந்து ஆலயங்களுக்கு ரிம 2மில்லியனும் ஒதுக்கப்படுகிறது.

சீர்செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள தேசிய வகை மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியையும் மிட்லண்ட்ஸ் மாநாட்டு மையத்தையும் எண்ணி இந்திய சமூகம் பெருமை கொள்ளலாம். மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஈஜோக்கில் முழு தங்கு வசதிகொண்ட தமிழ்ப்பள்ளி இருக்கிறது.

மறுபுறம் பாருங்கள். பிஎன்னின் 55 ஆண்டுக்கால ஆட்சியில் புத்ரா ஜெயாவுக்கும் சைபர் ஜெயாவுக்கும் இடம்விட்டு  ஐந்து பெரிய தோட்டங்கள் அழிக்கப்பட்டன.

அவற்றில் பணி புரிந்த தொழிலாளர்கள் தொலைதூரத்தில்- பள்ளிகளும் ஆலயங்களும் மற்ற வசதிகளுமற்ற தொலைதூரப் பகுதியில்  கட்டப்பட்ட குறைந்தவிலை வீடுகளில் குடி அமர்த்தப்பட்டார்கள். இவற்றுக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சாமிவேலு.

மேம்பாட்டுப் பணிகளுக்காக மேன்மேலும் தோட்டப்புறங்கள்  அழிக்கப்பட்டதால் சிலாங்கூர் முழுவதும் இந்திய சமூகம் நாதியற்ற சமூகமாக மாறியது.

இதற்கு பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களே காரணகர்த்தாக்கள்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல், சாமிவேலு தாமே பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் எப்பிங்ஹெம் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்துக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இன்றுவரை அவ்விவகாரம் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.

சாமிவேலு தலைவராக இருந்தபோது பலவீனமான தலைவர்களையே தம்மைச் சுற்றி வைத்திருப்பது வழக்கம். சிலாங்கூர் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.

துண்டு துணுக்குகளில் மனநிறைவு கண்ட கூட்டம்

சிலாங்கூரில் அடுத்தடுத்து வந்த மஇகா தலைவர்களும் தேசிய தலைவரின் தத்துவத்தைப் பின்பற்றி அம்னோ எஜமானர்களின் மனம் கோணாமல் நடந்துகொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

அவ்வப்போது அம்னோ வீசி எறியும் துண்டு துணுக்குகளில் மனநிறைவு கொண்டார்கள்.

இந்தப் போக்கே தொகுதி நிலையிலும் கிளைகள் நிலையிலும் நின்று நிலவியது.

எடுத்துக்காட்டுக்கு,  மாநிலக் கல்வி அதிகாரிகள், அம்னோ தலைவர்கள் ஆகியோரின் கோபத்துக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவே, பெரும்பாலும் மஇகா தலைவர்களாகவும் இருந்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களின் பிரச்னைகளை எடுத்துச் சொல்லாமல் மெளனமாக இருந்து விடுவார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மஇகா கிளையும், நாடற்றவர்களாக உள்ள இந்தியர்களில் பத்து பேரின் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால்கூட இந்நேரம் இப்பிரச்னைக்கு முடிவு காணப்பட்டிருக்கும்.

மஇகாவின் எல்லா நிலைகளிலும் உள்ள தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் பொம்மைகளாகத்தான் இருந்தார்கள். பிஜேகே, பிபிஎன், ஏஎம்என் போன்ற விருதுகள் பெறுவதில்தான் குறியாக இருந்தார்கள்.

பொதுத்தேர்தலையும் இடைத்தேர்தல்களையும் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். அம்னோ சகாக்கள் பரப்புரைக்காகக் கொடுக்கும் பணத்தில் தங்களுக்கு வேண்டியதை ஒதுக்கி விடுவார்கள்.

அம்னோவும் மஇகாவும் இந்தியர்களை வைத்து நாடகமாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. மஇகா இந்தியர்களுக்கு நல்லது செய்ய போதுமான வள ஆதாரங்கள் இல்லையே என்று புலம்பும். அம்னோ, இந்தியர்களுக்குத் தேவையான அனைத்தும் மஇகா மூலமாக செய்யப்பட்டு விட்டது என்று முழங்கும்.

இந்தப் பாவைக்கூத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன இந்தியர்கள் 2008-இல் வாக்குப்பெட்டிகள் வழி தங்கள் கருத்தை உரத்த குரலில் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லி விட்டார்கள்.

இதனால் நஜிப் (இடம்), 2009-இல் தாம் பிரதமர் ஆனதும் இந்தியர்களை நேரடியாக அணுகும் முறையைப் பின்பற்றத் தொடங்கினார்.

அம்முயற்சியில் நஜிப் தோற்றுப்போனதாகவே தெரிகிறது. அதனால்தான் அவர் இப்போது தம் ஏவலைச் செய்ய பழையபடி மஇகாவையும் சாமிவேலுவையும் பயன்படுத்துக்கொள்ள முனைந்திருக்கிறார்போலும்.

ஆனால் சிலாங்கூரிலும் சரி மற்ற இடங்களிலும் சரி, பிஎன்னின் தோற்றுப்போன இந்தியர் தலைவர் என்றால் அது சாமிவேலுதான். எனவே, அரசியல் ஓய்விலிருந்து மீண்டுவருவது பற்றி அவர் யோசிக்க வேண்டும்.

======================================================================================

மனோகரன் மலையாளம்: சிலாங்கூர், கோட்டா ஆலம் ஷா சட்டமன்ற உறுப்பினர்