ராயிஸ்: அரசாங்கத்தை மாற்றுவதை மறந்து விடுங்கள்

வரும் பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தை மறந்து விடுமாறு மக்களுக்கு தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவுரை கூறியிருக்கிறார்.

மக்கள் அதற்குப் பதில் அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மேற்கொண்டு வருகின்ற உருமாற்றங்கள் நம் அனைவருக்கு நன்மைகளைக் கொண்டு வரும்.”

“நம்மிடம் வளமான தேசிய சொத்துக்களும் சமூகக் கருவூலங்களும் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டாம்,” என கோலாலம்பூரில் இன்று மலேசிய தேசிய பழஞ்சுவடிக் காப்பகத்தின் 55வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

நியாயமான கவனமான பரிசீலினை இல்லாமல் அரசாங்கத்தை மாற்றும் சோதனையை மக்கள் மேற்கொண்டால் அது ஆபத்தாக இருக்கலாம் என முன்னாள் டிஏபி உதவித் தலைவர் துங்கு அப்துல் அஜிஸ் துங்கு இப்ராஹிம் தெரிவித்த கருத்தை ராயிஸும் பகிர்ந்து கொண்டார்.

எதிர்க்கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகளினாலும் அவை தெரிவித்த அவதூறுகளினாலும் கவரப்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை மாற்ற விரும்புவதாக இன்று விடுத்த ஒர் அறிக்கையில் துங்கு அப்துல் அஜிஸ் கூறியுள்ளார்.

-பெர்னாமா

TAGS: