தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒரு கோவில் என்ற வகையில் 16 கோவில்கள் உடைபட்ட போது மஇகா இளைஞர் பிரிவினர் என்ன செய்தனர் என்ற வினா எழுந்துள்ளது.
2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வரையில் 16 கோவில்களும் வழிப்பாட்டு தலங்களும் உடைக்கப்பட்டன. (விபரங்களைக் காண இங்கே சொடுக்கவும்)
அந்தக் காலக்கட்டத்தில் இந்த மஇகா இளைஞர் பிரிவினரின் போராட்டங்கள் எப்படி இருந்தன என்பதை விளக்க வேண்டும் என்கிறார் சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம்.
2008-ஆம் ஆண்டு தேர்தலில் மோசமாக தோல்வி கண்ட தேசிய முன்னணி இந்தியர்களிடையே தனது செல்வாக்கைச் சீர்செய்ய பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று கோவில்களுக்கு நிதி வழங்குவது ஆகும். அதேவேளை, மஇகாவினர் திடீரென ஞானம் பிறந்தது போல் தங்களைக் காட்டிக்கொள்வது அரசியல் நாடகமாகவே தோன்றுகிறது.
அண்மையில் செப்பாங் நகராட்சி மன்றம் உடைத்த சாமி மேடை விவகாரத்தை மஇகா இளைஞர் பிரிவு கையாளும் விதம் ஆச்சரியமாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அது சார்பாக எந்த ஒரு ஆட்சேபனையைத் தெரிவிக்கவும் இல்லை அல்லது அது சார்பாக மேல் முறையீடு செய்யவும் இல்லை என தெரிகிறது. எனவே உடைக்கப்பட வேண்டும் என்ற வகையில் அவர்கள் நடந்து கொண்டது போல் அமைந்துள்ள அந்த சம்பவத்தின் பின்னணி மீது அரசியல் சாயத்தை பூசுகிறது மஇகா.
“செப்பாங் நகராட்சி மன்றம் சாமி மேடையை உடைத்தது சரி என்று சொல்லவில்லை” என்ற வழக்கறிஞர் கா. ஆறுமுகம், அது சார்பாக முறையாக மனு செய்திருந்தால் அல்லது நகராட்சி மன்றத்தில் உள்ள நகராண்மைக் கழக உறுப்பினர்களிடம் பேசியிருந்தால் கூட இந்த விவகாரம் முறையாகக் கையாளப்பட்டிருக்கும். இது சமயத்தை இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்று மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாக தாம் கருதவில்லை என்கிறார்.
“இந்த நிகழ்வைக்கொண்டு அரசியல் வியாபரம் செய்ய நினைப்பவர்கள் தங்களது புறமுதுகை ஒரு புறம் கண்ணாடியில் பார்க்க வேண்டும்”. இன்று சமயத்தைக் காக்க வேண்டும் என்ற வகையில் எழுந்துள்ள விழிப்புணர்ச்சி கட்சி அரசியல் நிலையைத் தாண்டியுள்ளது. அதில் தவறு நடந்தால் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தட்டிக் கேட்க வேண்டும். அதை அரசியல் உரிமையாக நினைப்பவர்கள் கட்சி அரசியலை தவிர்க்க வேண்டும். நமது சமயத்தைக் காப்பதில் நமக்கு எதிரி நாம் அல்ல என்பதையும் உணர வேண்டும் என்றார் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினருமான கா. ஆறுமுகம்.