பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், போலீசார் இன்று தம்மை அழைத்து விசாரணை செய்தது, நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதை வலியுறுத்த அடுத்த வாரம் புத்ரா ஜெயாவில் தேசிய பதிவுத் துறை தலைமையகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் குந்தியிருப்புப் பேரணியைத் தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கிறதெனக் கூறுகிறார்.
நவம்பர் 24இல், பிரிக்பீல்ட்சில் நாடற்றவர்களாகவுள்ள இந்தியர் பற்றியும் மைகார்ட், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற அவர்களுக்குள்ள உரிமை பற்றியும் பேசியது குறித்து விசாரிப்பதற்காக தாம் அழைக்கப்பட்டிருந்ததாக சுரேந்திரன் (வலம்) தெரிவித்தார்.
“அதிகாரிகள் நெருக்கடிகளையும் தொல்லைகளையும் கொடுத்து மக்கள் பேரணியைத் தடுக்கப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
“அம்மக்கள் பேரணி, நாடற்றவர்களாக இருக்கும் பல நூறாயிரம் மலேசியர்களுக்கு- மேற்கு மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்காக மட்டுமல்லாமல் அப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மலேசியர்களுக்கும்- நீதி கிடைப்பதற்காக நடத்தப்படுகிறது”, என்றாரவர்.
விசாரணைக்காக ஜாலான் ட்ரேவர்ஸ் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற சுரேந்திரனுடன் வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் எஸ்.அம்பிகாவும் பிகேஆர் சட்ட விவகார இயக்குனர் லத்தீபா கோயாவும் சென்றனர்.
அரசாங்கம் இவ்விவகாரத்தை அசட்டை செய்யாமல் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று அம்பிகா கேட்டுக்கொண்டார்.
“என்னைப் பொறுத்தவரை நாடற்ற மலேசியர் என்று எவருமே இருக்கக்கூடாது”, என்றாரவர்.
இதனிடையே, லத்தீபா இரண்டு நாள்களுக்கு முன்னால் காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகமும் போலீசாரால் விசாரிக்கப்பட்டதாகக் கூறினார். அதை வைத்து பேரணிக்கெதிரான நடவடிக்கை தொடரும் என்றே அவர் நினைக்கிறார்.
“பேரணியைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடரலாம் ஆனால், அவை பேரணி நடப்பதைத் தடுக்கப்போவதில்லை” என்று குறிப்பிட்ட அவர், வெறுமனே கண்டனம் தெரிவிப்பதற்காக நடத்தப்படும் ஒரு கண்டனக் கூட்டம் அல்ல இது என்றார்.
“மக்களை நாடிச் சென்று அவர்களின் உரிமைகளை அவர்களுக்குக் கொடுங்கள் என்று என்ஆர்டி-யைக் கேட்டுக்கொள்கிறோம்”,என்றவர் சொன்னார்.
பேரணியை டிசம்பர் 5-இல் நடத்தப்போவதாக பிகேஆர் அறிவித்திருந்தது. ஆனால், அளவுக்கதிகமான ஆதரவு பெருகியிருப்பதால் டிசம்பர் 12-இல் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.