சிலாங்கூரில் மக்களுக்காக தான் மலிவான நிலங்களைப் பெற்றதாக பிஎன் கூறிக் கொள்வதை நிராகரிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
கிளானாஜெயாவில் அவ்வாறு மலிவாக பெற்ற நிலங்களில் ஒன்றில் ஆடம்பர அடுக்குமாடித் தொகுதி ஒன்று அமைந்துள்ளதை அது சுட்டிக் காட்டியது.
இன்று அந்த இடத்துக்கு பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா வருகை அளித்தார். அந்த நிலம் 2004ம் ஆண்டு ஒரு சதுர அடிக்கு ஒரு ரிங்கிட் விலையில் பெறப்பட்டது என்றும் இப்போது மேம்பாட்டுக்கு பின்னர் அதன் மதிப்பு ஒரு சதுர அடிக்கு 200 ரிங்கிட் என்றும் அவர் சொன்னார்.
சூரியா டமன்சாரா என்னும் அந்த மேம்பாட்டுத் திட்டத்தில் மொத்தம் 200 ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் மதிப்பு 450,000 ரிங்கிட் ஆகும்.
“நாங்கள் குற்றம் சாட்டிய போது அதனை மறுத்த பிஎன் அந்த நிலங்கள் சமூக நன்மைகளுக்கும் பாலர் பள்ளிகளைக் கட்டுவதற்கு பெறப்பட்டதாக் கூறியது,” என்றார் புவா.