பிகேஆர்: டிஎன்பி மீட்டர் திட்டத்தில் பாக் லா-வின் உறவினருக்கு தொடர்பு உண்டு

டிஎன்பி எனப்படும் தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்கு புதிய மீட்டர்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றுடன் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக பிகேஆர் முதலீட்டு, வாணிகப் பிரிவுத் தலைவர் வோங் சென் கூறிக் கொண்டுள்ளார்.

அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான அவர் ஒரு நிறுவனத்தில் இயக்குநராக இருக்கிறார். அந்த நிறுவனம் மீட்டர்களை விநியோகம் செய்த நிறுவனத்தில் 15 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளது என பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் அவர் நிருபர்களிடம் கூறினார்.

“அது தான் உண்மை. நாங்கள் யார் மீது குற்றம் சாட்டவில்லை. அந்த விவகாரத்தை நண்பர்களுக்கு உதவுவது போன்ற மற்ற விஷயங்களுடன் பொது மக்கள் தொடர்புபடுத்துவதற்கு முன்னர் டிஎன்பி அந்த விஷயத்தை விளக்கி விடுவது நல்லது,” வோங் சொன்னார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அப்துல்லாவின் உறவினர் பெயர் ஆகியவற்றை வெளியிடுவது அவர்களிடமிருந்து கருத்துக்களை மலேசியாகினி கோரியிருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீட்டர் சாதனங்கள் மாற்றப்பட்ட பின்னர் தங்களுக்கு மிக அதிகமாக கட்டணம் விதிக்கப்படுவதாக பயனீட்டாளர்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து மீட்டர்களை மாற்றும் திட்டத்தை டிஎன்பி கடந்த அக்டோபார் மாதம் நிறுத்தி வைத்தது.

அந்தத் திட்டத்துக்கான வழிமுறைகள் தயாரிக்கப்படும் வரையில் மீட்டர்களை மாற்றும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு ஜுன் வரையில் மின் கட்டணம் மாற்றப்பட மாட்டாது என்றும் எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் பா ஹுய் அறிவித்துள்ளார்.

TAGS: