கோம்பாக்கில் நேற்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்ட செராமா நிகழ்வின் போது பக்கத்தான் ஆதரவாளர் ஒருவர் ‘அம்னோ ஆதரவாளர்களின்’ கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்கானதாக சொல்லப்படுகின்றது.
அந்த பக்காத்தான் ஆதரவாளர் ‘kerambit’ எனப்படும் வளைந்த சிறிய கத்தி ஒன்றினால் இடது தோள்பட்டையில் காயம் ஏற்படுத்தப்பட்டதாக பிகேஆர் கட்சி ஏடான கெஆடிலான் டெய்லி கூறியது.
“கோம்பாக் பத்து 8 1/2ல் உள்ள டாத்தாரான் ஷாஹருடினில் நடைபெற்றுக் கொண்டிருந்த செராமாவுக்கு அம்னோ குண்டர் கும்பல் ஒன்று- அவர்களில் சிலர் பிஎன் கொடிகளை வைத்திருந்தனர்- இடையூறு செய்த போது அந்தத் தாக்குதல் நிகழ்ந்தது.”
“அந்தக் குழுவில் இருந்தவர்களில் சிலர் ‘சிலாட் தற்காப்புக் கலையில்’ தேர்ச்சி பெற்றவர்கள் எனக் கருதப்படுகிறது. அவர்கள் கெட்ட சொற்களைப் பயன்படுத்தி கூச்சல் போட்டதுடன் கூட்டத்தினர் மீது கற்களையும் எறிந்தனர்,” அது தகவல் வெளியிட்டது.
அந்தச் சம்பவத்தைக் கண்டித்த அன்வார், அதே வழியில் பதிலடி கொடுக்க வேண்டாம் எனத் தமது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
“அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் நேரடியாக கோம்பாக் போலீஸ் படைத் தலைவரைத் தேடிச் செல்வேன்,” என அவர் சொன்னதாக அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸ் அந்தச் சம்பவத்தை விசாரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஐந்தாவது வன்முறைச் சம்பவம்
இவ்வாண்டு அந்த முன்னாள் துணைப் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளது இது ஐந்தாவது முறையாகும்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றவிருந்த கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் மூன்று நாட்டு வெடி குண்டுகள் வெடித்தன.
பிப்ரவரி மாதம் மலாக்கா அலோர் காஜாவில் அன்வார் செராமாவுக்கு அம்னோ/பிஎன் ஆதரவாளர்கள் இடையூறு செய்தனர். அதனால் குழப்பம் ஏற்பட்டது.
அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் ஜோகூர் செம்புரோங்கில் அன்வாருடைய கார் மீது கற்களையும் பட்டாசுகளையும் அம்னோ ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகின்றவர்கள் வீசியதாகச் சொல்லப்பட்டது. அதில் அன்வார் காரின் முன் கண்ணாடி உட்பட பல பகுதிகளில் சேதம் ஏற்பட்டது.
மே மாதம் லெம்பா பந்தாயில் அன்வார் செராமா ஒன்றிலும் அருகில் நடைபெற்ற அம்னோ ஆதரவு செராமா ஒன்றிலும் கலந்து கொண்டவர்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களையும் முட்டைகளையும் தண்ணீர் போத்தல்களையும் எறிந்து கொண்டனர். அதில் 12 வயதுச் சிறுமி உட்பட இரு தரப்பிலும் மூவர் காயமடைந்தனர்.