ஸ்கார்ப்பின் விசாரணை மீது பத்து எம்பி-யும் சுவாராமும் பொய் சொல்வதாக ஜேஎம்எம் குற்றம் சாட்டுகிறது

பிரான்ஸில் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி விவகாரம் மீது சுவாராமும் பத்து எம்பி தியான் சுவா-வும் பொது மக்களிடம் பொய் சொல்வதாக அரசாங்க ஆதரவு  Jaringan Melayu Malaysia (JMM) பழி சுமத்தியுள்ளது.

அந்த விவகாரம் மீது பிரஞ்சு அதிகாரிகள் விசாரணையை மட்டுமே மேற்கொள்வதாக தியான் சுவா இரண்டு முறை நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதாக ஜேஎம்எம் தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா சொன்னார்.

ஆனால் அது குறித்து பொது மக்களிடம் பிரான்ஸில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக அவர் பொய் சொல்கிறார் என அவர் குறிப்பிட்டார்.

அந்த விவகாரம் மீது நீதிமன்ற வழக்கு ஏதுமில்லை என பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவா ஒரு முறை மட்டுமல்ல இரண்டு முறை நாடாளுமன்றத்தில் சொன்னது நவம்பர் 21ம் தேதி மக்களவைக் கூட்டக் குறிப்புக்களில் இடம் பெற்றுள்ளதாக அஸ்வாண்டின் தெரிவித்தார்.

“அந்த விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என மக்களிடம் தியான் சுவாவும் சுவாராமும் தவறாகச் சொல்கின்றனர் என நான் நினைக்கிறேன். இது நான் சொல்வதிலிருந்து நிரூபிக்கப்படவில்லை. மாறாக அந்த எம்பி சொன்னதாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குறிப்புக்கள் மெய்பிக்கின்றன.”

“அந்தக் கூட்டக் குறிப்புக்களின் 160வது பக்கத்தில் தியான் சுவா சொன்னதாக இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது: “நாம் கூட்டக் குறிப்புக்குச் செல்வோம். I tidak pernah sebut perbicaraan.” (விசாரணை நடப்பதாக நான் சொல்லவே இல்லை)

“161வது பக்கத்தில் தியான் சுவா சொன்னதாக இன்னொரு குறிப்பு காணப்படுகின்றது: “Saya tidak pernah kata Perancis ada perbicaraan (பிரான்ஸில் நீதிமன்ற விசாரணை நிகழ்வதாக நான் சொல்லவே இல்லை).” அந்தத் தகவலை அஸ்வாண்டின் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் ஸ்கார்ப்பின் விவகாரம் மீது நீதிமன்ற விசாரணை நிகழ்வதாகவும் ஆஜராகுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அழைப்பாணை (சபீனா) அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்திகள் கடந்த ஒர் ஆண்டாக வலம் வந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

அந்தக் குறுஞ்செய்திகளுக்குப் பின்னணியில் யார் இருக்கின்றனர் என்பதை அஸ்வாண்டின் தெரிவிக்கவில்லை  என்றாலும் மலேசியா இரண்டு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளைக் கொள்முதல் செய்ததின் தொடர்பில் பாரிசில் நீதிமன்ற வழக்கு நடைபெறுவதாக தியான் சுவாவும் சுவாராமும் செராமா நிகழ்வுகளில் அறிவிப்பதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டினார்.

“அது மக்களைத் தவறாக வழி நடத்துவதாகும். அந்த வெறும் விசாரணை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அதாவது போலீசார் ஒரு விவகாரத்தை புலனாய்வு செய்வது போன்றதாகும். ஒருவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு குற்றம் சாட்டப்பட்டதைப் போன்றதல்ல அது.”

“என்றாலும் சுவாராமும் எதிர்க்கட்சிகளும் பொது மக்களிடம் தவறாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அது வெறும் விசாரணையே என சுவா ஒப்புக் கொள்வதை மக்களவைக் கூட்டக் குறிப்புக்கள் நிரூபிக்கின்றன. பொது மக்கள் அதனைப் புரிந்து கொள்வர் என்றும் ஏமாற மாட்டார்கள் என்றும் நான் நம்புகிறேன்,” என நாடாளுமன்ற கூட்டக் குறிப்புக்களின் பிரதி ஒன்றைக் காட்டிய அஸ்வாண்டின் சொன்னார்.

பிரஞ்சு நீதிபதிகள் ஸ்கார்ப்பின் விவகாரத்தை விசாரிக்கும் பிரான்ஸில் நீதிபரிபாலன முறை மாறுபட்டது எனச் சுட்டிக் காட்டப்பட்ட போது அவர், தியான் சுவா பொது மக்களைத் தவறாக வழி நடத்துவது தான் உண்மை என வலியுறுத்தினார்.