சிலாங்கூரில் பொருத்தப்பட்டுள்ள இரண்டு AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் வெள்ளிக் கிழமை அகற்றும்.
“அது அகற்றப்படும் நேரத்தை நான் ஊடகங்களுக்குத் தெரிவிப்பேன்,” என ஊராட்சி மன்றங்களுக்குப் பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ கூறினார்.
SKVE என்ற தெற்குக் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் 6.6 கிலோ மீட்டரிலும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 301.6வது கிலோமீட்டரிலும் அந்த வேகக் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
SKVE -யில் பொருத்தப்பட்டுள்ள கேமிராவை தொழிலாளர்கள் அகற்றுவதாக காட்டும் படங்கள் (இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன) உண்மையானவை அல்ல என லியூ சொன்னார்.
“அது போலியானது. அவை பொருத்தப்படும் போது எடுக்கப்பட்டவையாக இருக்கலாம். சோதனை செய்வதற்கு நான் ஊழியர்களை அனுப்பினேன். அந்த கேமிராக்கள் இன்னும் அங்கு தான் உள்ளன,” என்றார் அவர்.
அந்த AES என்ற தானியங்கி அமலாக்க முறை கேமிராக்களை அகற்றுமாறு அதன் குத்தகையாளர்களுக்கு இரண்டு வார நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னர் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அந்த கேமிராக்களைப் பொருத்துவதற்கான மேம்பாட்டு ஆணையை அதன் குத்தகையாளர்களும் சாலைப் போக்குவரத்துத் துறையும் பெறத் தவறி விட்டன எனக் கூறிக் கொண்ட லியூ அதனால் அவை சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்டவை எனத் தெரிவித்தார்.