உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது.
எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்கார்க் அறிவித்துள்ளது.
‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக அளவில் கொண்ட உணவுப் பொருட்களே இந்த புதிய வரிவிதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
வெண்ணெய், பால், பாலாடை, பிட்சா, இறைச்சி, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் 2.3 சதவீதத்துக்கு மேலாக உடலில் கரையாத ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ இருக்கும் பட்சத்தில் அவற்றின் மீது வரி விதிக்கப்படும்.
இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே, டென்மார்க்கில் நுகர்வோர்கள் பலர் விலையேற்றத்தை தவிர்க்கும் நோக்கில் பெருமளவில் பொருட்களை வாங்கி சேமித்துள்ளனர்.
இந்த வரிவிதிப்பை அரசு அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பயங்கரம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் டேனிஷ் அரசாங்கமோ, இந்த புதிய வரியானது தமது நாட்டு குடிமக்கள் அதிக கொழுப்புள்ள பொருட்களை உட்கொள்வதை தடுக்க உதவும் என்று வாதிடுகிறார்கள்.
எனினும் சில விஞ்ஞானிகள் மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தவறான இலக்கை நோக்கிய பயணம் என்று கூறுகிறார்கள்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் உப்பு, சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போ ஹைட்ரேட்டுகள் போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்வதை குறைக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே மிக முக்கியமானது என்றும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.