மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து கார்ப்பரல் ஜெனாய்ன் விடுதலை

ஷா ஆலம் உயர் நீதிமன்றம், கார்ப்பரல் ஜெனாய்ன் சுபியை ஈராண்டுகளுக்கு முன் 15-வயது அமினுல் ரஷிட் அம்சாவுக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டிலிருந்து இன்று விடுவித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு விதித்த ஐந்தாண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக ஜெனாய்ன் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி அப்துல் ரஹ்மான் செபி அவரைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தார்.

அமினுல் ரஷிட் (வலம்) ஓட்டிச்சென்ற புரோட்டோன் ஈஸ்வரா காரைத் தடுத்து நிறுத்தத்தான், போலீஸ் அதிகாரி அதை நோக்கிச் சுட்டார் என்ற வாதத்தை ஏற்பதாக நீதிபதி அப்துல் ரஹ்மான் தம் தீர்ப்பில் கூறினார்.

ஜெனாய்ன் (வயது 49) மீது குற்றம்சாட்ட போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை எதிர்வாதம் செய்ய அழைத்திருக்கக் கூடாது என்றாரவர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 13-இல், செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லத்திபா முகம்மட் தாஹார், ஜெனாய்ன் குற்றவாளி என்று தீர்மானித்து அவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தார்.

ஜெனாய்ன் 2010 ஏப்ரல் 26-இல், ஷா ஆலம், செக்‌ஷன் 11 ஜாலான் 11/2-இல் பின்னிரவு மணி 1.10-க்கும் இரண்டுக்குமிடையில் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

-பெர்னாமா

 

 

TAGS: