பிலிப்பைன்ஸில் சூறாவளி: சாவு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

தென் சீனக்கடல் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டோனாவை நேற்று தைபூன் எனப்படும் சூறாவளிக் காற்று தாக்கியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த மழையுடன் வீசிய இந்த சூறாவளிக்கு ‘தைபூன் பூபா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மிண்டோனா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

சுரங்கங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் சுரங்கங்களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் பாய்ந்தோடியதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக மக்கள் தங்கியிருந்த பள்ளிக்கூடம் ஒன்றில், சுரங்கத்தின் வண்டல் மண்ணுடன் சேறு போல பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.

மீட்பு பணியினர் படகுகளின் மூலம் உயிருடன் உள்ளவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். நியூபட்டான் பகுதியில் உள்ள திறந்த வெளியில் மீட்கப்பட்ட பிணங்கள் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இந்த சூறாவளிக்கு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற உடல்களையும் மீட்டு கரை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினருக்கு உள்ளூர் இளைஞர்கள் உதவி செய்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஹெலிகாப்டர் மூலமாக நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. குடிநீர், உணவு, மருந்து வகைகள், மீட்பு பணிக்கான உபகரணங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.