2001ம் ஆண்டுக்கும் 2011ம் ஆண்டுக்கும் இடையில் ‘தவறாக நீக்கப்பட்ட’ 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வழக்குகளை தொழிலியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று நியாயம் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் தொழிலாளர் தலைவர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
முதலாளிகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுக்கள் தோல்வி கண்ட பின்னர் அந்த வழக்குகளை நீதிமன்றங்களுக்கு அனுப்ப மனித வள அமைச்சு மறுப்பதே அதற்குக் காரணம் என 51 அரசு சாரா அமைப்புக்களைப் பிரதிநிதிக்கும் சார்ல்ஸ் ஹெக்டர் கூறினார். அவர் விடுத்த அறிக்கையை அந்த 51 அமைப்புக்களும் அங்கீகரித்துள்ளன.
சாட்சிகள், ஆவணங்கள் ஆகிய ஆதாரங்கள், சட்ட வாதங்கள் ஆகியவற்றை பரிசீலிப்பதற்கு தொழிலியல் நீதிமன்றங்களே சிறந்த இடம் என்பதால் அமைச்சர் முடிவுகளைச் செய்யக் கூடாது,” என ஹெக்டர் சொன்னார்.
“ஆகவே அமைச்சரது காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. தங்கள் வேலைகளை இழந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கைகள் மீது முதலாளிகள் கொடுத்த விளக்கங்களை அமைச்சர் ஏற்றுக் கொண்டதாகத் தோன்றுகிறது.’
சமரசத்தின் வழி 31,714 விவகாரங்கள் தீர்க்கப்பட முடியாமல் போயிருப்பதாக அக்டோபர் 23ம் தேதி வெளியான உத்துசான் ஆன்லைன் ( Online ) செய்தி பற்றி வழக்குரைஞருமான ஹெக்டர் கருத்துரைத்தார்.
10,016 விவகாரங்கள் நீதிமன்றத்துக்கு ஏன் கொண்டு செல்லப்படவில்லை என்பதற்கான காரணங்களை வெளியிட்ட மனித வள அமைச்சர் எஸ் சுப்ரமணியத்தின் அறிக்கையையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தவறான நடத்தை, முதலாளிகள் தொழிலை மூடியது, வேலைக்குத் திரும்ப வாய்ப்புக் கொடுத்தும் தொழிலாளர்கள் வராதது ஆகிய பல காரணங்களுக்காக தொழிலாளர்கள் நீக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஒப்பந்த காலம் முடிந்தது தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டது, சுயமாக ஒய்வு பெறும் திட்டத்தின் கீழ் வேலையிலிருந்து நின்ற பின்னர் இழப்பீடைப் பெற்றுக் கொண்ட பின்னர் தங்கள் எண்ணத்தை தொழிலாளர்கள் மாற்றிக் கொண்டது ஆகியவை மற்ற காரணங்களில் அடங்கும்.
தொழிலியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படாத வழக்குகளைக் கொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நீதித் துறை மறு ஆய்வு கோரி உயர் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என ஹெக்டர் குறிப்பிட்டார்.
என்றாலும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு தங்கள் வழக்கை தொடருவதற்குத் தேவையான வளங்களோ ஆற்றலோ இல்லாததால் அது நடக்காது என அவர் சொன்னார்.
உயர் நீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்து கொள்வதில் செலவுகள் மட்டும் சம்பந்தப்படவில்லை, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால் கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் செலவுத் தொகையைக் கொடுக்குமாறு உத்தரவிடப்படக் கூடிய ஆபத்தும் உள்ளது என்றார் ஹெக்டர்.
“எனவே அந்த வழக்கை தொழிலியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவது இல்லை என அமைச்சர் செய்யும் முடிவு, பாதிக்கப்பட்ட தொழிலாளர் நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது,” என அவர் விளக்கினார்.
சமரசமாக தீர்க்க முடியாத எல்லா விவகாரங்களும் தொழிலியல் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த 51 அமைப்புக்களும் கேட்டுக் கொண்டன.
‘தொழிலாளர் எதிர்ப்புப் போக்கிற்கான அறிகுறி’
தவறாக வேலை நீக்கம் செய்வது என்பது கடுமையான தவறாகும், அதனைத் தடுப்பதற்கு தகுந்த இழப்பீடுகளைகொடுக்குமாறு நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க வேண்டும், நீதியைப் பெறுவதற்கு எல்லா வகையான தொழிலாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என முன்னாள் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைவர் சையட் ஷாஹிர் சையட் முகமட் கூறினார்.
“அரசாங்கம் முதலாளிகளுடைய நலன்களை தொழிலாளர்களுடைய நலன்களுக்கு மேலாகக் கருதுவது வருத்தமளிக்கிறது. தவறாக நீக்கப்பட்ட தொழிலாளர்களுடைய உரிமைகள் கடந்த பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகின்றன,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.
“தவறாக நீக்கப்பட்டு சமரசம் மூலம் தீர்வு காண முடியாமல் போன மொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 31.5 விழுக்காடு விவகாரங்களை நீதிமன்றத்துக்கு அனுப்ப அமைச்சர் மறுத்துள்ளது தொழிலாளர் எதிர்ப்புப் போக்கிற்கு இன்னொரு அறிகுறி.”
இந்த நாட்டில் 13 மாநிலங்களில் ஐந்திலும் மூன்று கூட்டரசுப் பிரதேசங்களில் ஒன்றிலும் மட்டுமே தொழிலியல் நீதிமன்றங்கள் இயங்குவதைச் சுட்டிக் காட்டிய சையட் ஷாஹிர், நாடு முழுவதும் அவை அமைக்கப்பட வேண்டும் என்றார்.
“தொலைவு என்பது முதலாளியைக் காட்டிலும் தொழிலாளருக்கு அதிகம் பாதகமான அம்சமாகும். இதில் போக்குவரத்து, தங்குமிட வசதிகள் ஆகியவை மட்டும் சம்பந்தப்படவில்லை. நீதிமன்றங்களுக்குச் சாட்சிகளைக் கொண்டு செல்வதும் சிரமமான விஷயமாகும்.”
தவறாக நீக்கப்படும் போது நீதியை நாடுவதற்கு வாய்ப்பில்லாத குடியேற்றத் தொழிலாளர்களுக்கு அந்தப் பிரச்னை இன்னும் கடுமையானதாகும் . அவர்களுடைய குடிநுழைவு விசா/அனுமதிகள் காலாவதியாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் சட்டப்பூர்வமாக மலேசியாவில் தங்கியிருக்கவும் முடியாது, சட்டப்பூர்வமாக வேலை செய்யவும் முடியாது.
“அவர்கள் தொழிலியல் நீதிமன்றத்தில் புகார் செய்தாலும் மலேசியாவில் அவர்கள் தங்கியிருக்க முடியாது என்பதால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் தங்கி இருந்தால் கைது செய்யப்படுகின்ற, தடுத்து வைக்கப்படுகின்ற, கசையடி கொடுக்கப்படுகின்ற, நாட்டிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும்,” என சையட் ஷாஹிர் மேலும் சொன்னார்.