‘முன் கூட்டிய எச்சரிக்கை, ஒடுக்குமுறை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதைக் காட்டுகின்றது’

பெர்சே 3.0 பேரணி மீது போலீசார் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்ததாக செபுத்தே எம்பி தெரெசா கோக் நம்புகின்றார்.

அந்த நடவடிக்கைகளுக்கு ஐந்து நிமிடம் முன்னதாக கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அமலாக்க அதிகாரி ஒருவரிடமிருந்து தமக்கு எச்சரிக்கை கிடைத்ததே அவ்வாறு நம்புவதற்கான காரணம் என அவர் சொன்னார்.

பெர்சே 3.0 பேரணி மீது சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் அவர் இன்று காலை சாட்சியமளித்தார்.

அதிகாரிகள் காவல் புரியும் சாலைத் தடுப்புக்கள் தாம் வெளியேறுவதற்குத் தடையாக இருப்பதாக அவர்களிடம் தாம் புகார் செய்த போது அந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“Kalau nak balik, cepatlah. Mereka nak bertindak,” ( நீங்கள் வீடு திரும்ப விரும்பினால் அதனை விரைவாகச் செய்யுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்கவிருக்கின்றனர்) என அவர்கள் தம்மிடம் சொன்னதாக கோக் குறிப்பிட்டார்.

அதற்கு ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் தாம் பண்டாராயா எல்ஆர்டி நிலையத்தை நோக்கிச் சென்ற போது தொலைவில் மக்கள் ஒடுவதையும் அவர்களுக்குப் பின்னர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டதால் எழுந்த புகையையும் கண்டதாக அவர் தெரிவித்தார்.

“விவாதம் நடந்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். அடுத்து என்ன நடக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் நான் எண்ணுகிறேன்.”

“கூட்டத்தினர் மீதான தாக்குதலுக்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது என்ற எண்ணத்தையும் அது எனக்கு  ஏற்படுத்தியது,” என ஏப்ரல் 28ம் தேதி பேரணியின் போதும் அதற்கு பின்னரும் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் சுஹாக்காம் விசாரணையில் கோக் தெரிவித்தார்.

 

TAGS: