‘அம்னோ மருட்டல்கள்’ காரணமாக பக்காத்தான் பேரணி வேறு இடத்துக்கு மாற்றம்

மலாக்காவில் வரும் சனிக்கிழமையன்று பக்காத்தான் ராக்யாட் ஏற்பாடு செய்திருந்த Himpunan Kebangkitan Rakyat (மக்கள் எழுச்சிப் பேரணி) கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தின் உரிமையாளரை அம்னோ மருட்டியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

“அந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை உரிமையாளர் செய்து கொண்டிருந்தார். ஆனால் அவர் இன்று பிற்பகல் எங்களுடன் தொடர்பு கொண்டு அந்த ஒப்பந்தத்தை மீட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்,” என மலாக்கா பாஸ் செயலாளர் அஸ்ரி ஷேக் அப்துல் அஜிஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சில தரப்புக்கள் மருட்டிய பின்னர் அவர் அந்த ஒப்பந்தத்தை மீட்டுக் கொண்டுள்ளார்,” என அவர் சொன்னார்.

அம்னோ, பிஎன் ஆகியவற்றிடமிருந்து ‘பல வகையான மருட்டல்கள்’ வருவதால் அந்த இடத்தை பக்காத்தானுக்கு வாடகைக்கு விடுவதற்கு சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் ‘மிகவும் பயப்படுகிறார்’ என்றும் அஸ்ரி சொன்னார்.

கம்போங் புக்கிட் பாலாவில் உள்ள காலி நிலம் ஒன்றில் அந்த நிகழ்வு நடைபெறுவதற்கு முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது அது மலாக்கா டிஏபி தலைமையகத்துக்குப் பின்புறம் உள்ள இன்னொரு காலி நிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த விஷயம் பற்றி கருத்துக்களை பெறுவதற்காக பல அம்னோ தலைவர்களுடன் தொடர்பு கொள்ள மலேசியக்கினி முயற்சி செய்தது. ஆனால் இது வரையில் எந்தப் பதிலும் இல்லை.

TAGS: