சிப்பாங் பூசை மேடை உடைப்பு : கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆதரிக்கிறேன்!

சிப்பாங்கில் பூசை மேடை உடைக்கப்பட்டதைக் கண்டித்து இன்று சா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களை தாம் வரவேற்பதாக, சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவருமான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் தெரிவித்தார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களைப் பற்றி செம்பருத்தி வினவியபோது கருத்துரைத்த கா. ஆறுமுகம், “உரிமை என்பது போராட்டத்தின் எல்லை என்பது எனது கடப்பாடு, அதுதான் நமது வழிமுறையாக இருக்க வேண்டும்” என்றார். அது எந்த தரப்பினர் நடத்தினாலும் அதற்கு தமது ஆதரவு உண்டு என்றும் அதில் தானும் கலந்து கொள்ளவதாக கூறினார்.

இதுகுறித்து மேலும் விளக்கம் அளிக்கையில், பாக்காத்தான் அரசுக்கு தான் ஆதரவாகச் செயல்படுவது உண்மைதான் என்றும், ஆனால் அது கண்மூடித்தனமானதல்ல என்றார். இதுவரையில் எனது கொள்கைப் பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றவர், இந்த பூசை மேடை உடைப்பு ஒரு வருந்ததக்க நிகழ்வாகும் என்றார். தன்மூப்பாக உடைத்தது தவறு, அது பாக்காத்தான் அரசின் வரையரைகளுக்குள் அப்பாற்பட்டது. அதில் ஈடுபட்டவர்களின் நோக்கம் அரசியல் சூழ்ச்சி கொண்டதாக இருக்கலாம் என்றார்.

கடந்த ஒரு மாதத்தில் கோயில் உடைக்கப்படும் என்ற வகையில் இரண்டு செயல்கள் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் எழுந்ததாக கூறினார். அவை சீபீல்டு மாகா மாரியம்மன் கோயில் மற்றும் பூச்சோங் இந்தான் நாகேஸ்வரி கோயில் ஆகியவையாகும். இந்த கோயில்கள் குறித்த விவகாரம் தான் உறுப்பினராக உள்ள  சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தில் எந்த நிலையிலும் பேசப்படவில்லை இருப்பினும் அவை சார்பாக எழுந்த வதந்திகளை அப்படியே விட இயலாது என்றும் அது சார்பாக மாநில அரசு கண்காணிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும்  ஆறுமுகம் கூறினார்.

தேசிய முன்னணி ஆட்சியின் கீழ், கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒரு கோவில் என்ற வகையில் 16 கோவில்கள் உடைபட்ட போது மஇகா இளைஞர் பிரிவினர் என்ன செய்தனர்? என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா என அவரிடம் வினவியபோது, “மஇகாவில் போரட்டவாதிகளும் உள்ளனர் என்பதை  ஒப்புக்கொள்கிறேன், ஆனால் அம்னோவுக்கு வால் பிடித்ததால்தான் உரிமையை இழந்தோம் என்பதை ஏன் மறுக்கிறார்கள்?” என்றார்.

எதிர்வரும் 12.12.2012–இல் புத்ரா ஜெயாவில் நடைபெறைவுள்ள குடி உரிமை கோரும் போராட்டத்தில் இந்த மஇகா இளைஞர் பிரிவினர் ஆயிரக்கணக்கில் ஆள் சேர்த்து கலந்து கொண்டு தங்களின் உண்மையான உரிமை போராட்ட உணர்வை காட்டுமாறு கேட்டுக்கொள்வதாக ஆறுமுகம் பதிலளித்தார்.

TAGS: