சபா முதலமைச்சர் மூசா அமான் ‘வழங்கிய’ வெட்டுமரச் சலுகைகளுக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணம் தொடர்பில் ‘மேலும் விவரங்களை’ கொடுப்பதற்காக பிகேஆர் குழு ஒன்று செவ்வாய்க் கிழமை ஹாங்காங் செல்கிறது.
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் தலைமை தாங்கும் அந்தக் குழு, அந்தப் பணம் தொடர்பான பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட ஆவண ஆதாரங்களை ஹாங்காங் சுயேச்சை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கும்.
அந்த விவகாரம் மீதான புலனாய்வை அந்த ஆணையம் மீண்டும் தொடங்க அந்த ஆதாரங்கள் வழி வகுக்கும் என ராபிஸி நம்புகின்றார்.
அந்த ‘ஆதாரங்களில்’ வங்கிக் கணக்குகள், அவற்றின் பரிவர்த்தனைகள், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.
ராபிஸியுடன் கட்சியின் பொருளாளரும் செலாயாங் எம்பி-யுமான வில்லியம் லியாங், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் எம்பி ஹீ லோய் சியான், தேஜா சட்டமன்ற உறுப்பினர் சாங் லீ காங் ஆகியோரும் ஹாங்காங் செல்வர்.
“40 மில்லியன் ரிங்கிட் நன்கொடையை வழங்கிய வணிகருக்கும் சபா முதலமைச்சருக்கும் இடையில் உள்ள தொடர்பை நாங்கள் ஹாங்காங் ஊழல் தடுப்பு ஆணையத்துக்குக் காட்ட விரும்புகிறோம்,” என ராபிஸி நேற்றிரவு பினாங்கில் கூறினார்.
“ஹாங்காங்கில் மூசாவுக்குச் சொந்தமான பல கணக்குக்கள் உட்பட பல ஆவணங்களையும் நாங்கள் காட்டப் போகிறோம்.”
ராபிஸி ‘தகவல்களை அம்பலப்படுத்துவோரும் ஊழலும்’ என்னும் தலைப்பில் டிஏபி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசினார்.
பிகேஆர் உதவித் தலைவரும் பத்து எம்பி-யுமான தியான் சுவா, ஜெலுத்தோங் எம்பி ஜெப் ஊய் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர். மாநில டிஏபி தலைவர் சாவ் கொங் இயாவ் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தார்.
சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி மூசா சிந்திக்கிறார்
மூசாவுக்கு எதிரான விசாரணையைத் தொடருவதில்லை என ஹாங்காங் அமைப்பு கடிதம் எழுதியுள்ளபோதிலும் தாம் ‘ஆதாரங்களை’ கொடுக்கப் போவதாக ராபிஸி தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் ராபிஸி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி மூசா சிந்திப்பதாக சபா பிஎன் செயலாளர் அப்துல் ரஹ்மான் டாஹ்லான் மலேசிய இன்சைடர் செய்தி இணையத் தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கோத்தா பெலுட் எம்பி-யும் ஆவார்.
வரும் புதன் கிழமை காலை அந்த ‘ஆதாரங்களை’ கொடுப்பதற்காக தமது குழு ஹாங்காங் சுயேச்சை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளைச் சந்திக்கும் என்றும் ராபிஸி தகவல் வெளியிட்டார்.
புலனாய்வாளர்கள் அந்த ஆவணங்களைப் பரிசீலித்த பின்னர் அந்த விவகாரம் மீண்டும் திறக்கப்படும் என அவர் ‘உறுதியாக நம்புகிறார்’. அதற்கான நெருக்குதலை ஹாங்காங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்குவர் என்றும் அவர் சொன்னார்.
“உலகின் தலையாய நிதி மய்யம் என்ற முறையில் அந்த விவகாரம் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்,”என ராபிஸி கருதுகிறார்.
“வங்கிக் கணக்கறிக்கைகளையும் கணக்கு விவரங்களையும் வழங்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டோம். அத்துடன் 40 மில்லியன் ரிங்கிட் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐயம் கொண்டுள்ளனர். அது வெறும் நன்கொடை எனக் கூறப்படுவதை அவர்கள் நம்பவில்லை,” என அவர் மேலும் கூறினார்.
தகவல்களை தருகின்வர்களுக்கு நன்றி
நவம்பர் 23ம் தேதி தாம் ஹாங்காங்கிலிருந்து திரும்பியதிலிருந்து தகவல்களை அம்பலப்படுத்துகின்ற பலரதுமுயற்சிகள் வழி ஆவணங்களைத் தமது குழு திரட்டி வருவதாகவும் ராபிஸி தெரிவித்தார்.
தாம் தொடங்கியுள்ள தேசிய கண்காணிப்பு தகவல் தருவோர் மய்யத்தின் வழி பலர் தம்மை ரகசியமாக அணுகி கடிதங்களையும் வங்கி கணக்கறிக்கைகளையும் மூசாவுடன் சம்பந்தப்பட்ட நிறுவங்களுடய விவரங்களையும் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.