இப்போது அஞ்சுவது யார் என அம்னோ வினவுகின்றது

ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தமது பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பொது விவாதத்தை நடத்துவதற்கு பிஎன் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்ததின் மூலம் முதலமைச்சர் லிம் குவான் எங் ‘அச்சமடைந்துள்ளதாக’ பினாங்கு அம்னோ குற்றம் சாட்டியுள்ளது.

அத்தகைய பொது விவாதம் நடைபெற்றால் ஊடகங்கள் வழியாகப் பொது மக்கள் நீதிபதிகளாக இருக்க முடியும் என மாநில அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் ஷேக் ஹுசேன் ஷேக் மைடின் கூறினார்.

நான் ஊழல் புரிந்துள்ளேனா இல்லையா என்பதை தாம் நீதிமன்றத்தில் நிரூபிப்பதாகக் கூறி பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பொது மக்களுடைய தீர்ப்பை லிம் தவிர்க்க விரும்புகிறார் என அவர் சொன்னார்.

“வரும் தேர்தலில் பினாங்கு மக்கள் லி-மைத் தண்டிப்பார்கள் என நான் நம்புகிறேன்,” ஷேக் ஹுசேன் மலேசியாகினியிடம் கூறினார்.

தாமான் மாங்கிஸில் உள்ள 1.1 ஏக்கர் நிலத்தை KLIDC என்ற கோலாலம்பூர் அனைத்துலக மேம்பாட்டு மய்யம் மேம்படுத்துவதற்கு அதனிடமிருந்து லிம் லஞ்சம் பெற்றதாக ஷேக் ஹுசேனும் மாநில கெரக்கான் இளைஞர் துணைத்  தலைவர் ஹிங் கூன் லெங்கும் கூறிக் கொண்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு சட்ட நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

அந்த நிலத்தை மேம்படுத்துவதற்கான டெண்டரில் KLIDC வெற்றி பெற்றது. ஆனால் அந்த நிலம் பொது வீடமைப்பு மேம்பாட்டுக்காக  ஒதுக்கப்பட்ட நிலம் என பிஎன் தலைவர்கள் சொல்கின்றனர்.

ஆனால் அந்த நிலம் பொது வீடமைப்புக்கு மிகவும் சிறியது என்றும் அதற்காக ஜாலான் பி செல்லையாவில் 11 ஏக்கர் பரப்புள்ள நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் லிம் சொன்னார்.

அதனைத் தொடர்ந்து அந்த நிலத்தை 22 மில்லியன் ரிங்கிட்டுக்கு வாங்கிக் கொள்ள பிஎன் முன் வந்தது. ஆனால் அது பணம் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த டிசம்பர் 4 காலக்கெடுவுக்குள் பணத்தைக் கொடுக்காததால் மாநில அரசாங்கம் பிஎன் ‘முன் வந்ததை’ ரத்துச் செய்து விட்டது.

வாடகை ஒப்பந்தம் வெளியிடப்பட்டது

‘தாமான் மாங்கிஸ் ஊழல் விவகாரத்துடன்’ தொடர்பு இல்லாத விஷயங்களையும் மற்றவர்களையும் சம்பந்தப்படுத்துவதின் மூலம் லிம் அந்தப் பிரச்னையைத் திசை திருப்பி வருவதாக ஷேக் ஹுசேன் மேலும் கூறினார்.

லிம் ஊழல் புரிந்துள்ளார் எனக் கூறியதை மீட்டுக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுமாறு சட்ட நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் தாம் தொடுத்த குற்றச்சாட்டுக்களை மீட்டுக் கொள்வதற்கு தொழில் ரீதியில் பொறியிலாளரான அவர் மறுத்து விட்டார்.

“ஊழல் என்பதில் அதிகார அத்துமீறலும் நம்பிக்கைத் துரோகமும் அடங்கும் என்பதை லிம் அறிந்திருக்க வேண்டும்,” என ஷேக் ஹுசேன் சொன்னார்.

“அந்த  KLIDC நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ள இயக்குநர் ஒருவரிடமிருந்து வாடகைக்கு எடுத்துள்ள தமது ஆடம்பர பங்களாவைச் சூழ்ந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு லிம் இன்னும் பதில் அளிக்கவில்லை,” என்றும் அவர் கூறிக் கொண்டார்.

ஏற்கனவே லிம் தாம் குடியிருக்கும் வீடு சம்பந்தமாக வீட்டு உரிமையாளருடன் செய்து கொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளார். KLIDC திட்டத்தில் அவருக்கு பங்கு இருப்பதாகக் கூறப்படுவதை லிம் நிராகரித்தார்.

அந்த நிலத்தைப் பெறுவதற்கான டெண்டரில் KLIDC வெற்றி பெற்ற போதிலும் அது மருத்துவ மய்யத்திற்கு மேல் 19 மாடி ஹோட்டலைக் கட்டுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஷேக் ஹுசேன் கூறினார்.

அந்த நிலத்தை எடுப்பதற்கு முயற்சி செய்த மற்றவர்களுக்கு அந்தச் சலுகை பற்றித் தெரியாது என அவர் கூறிக் கொண்டார்.

“அது தெளிவாக அதிகார அத்துமீறல். டெண்டர் நடைமுறையில் மோசடி செய்வதாகும். நாங்கள் அந்த விஷயத்தை பல முறை எழுப்பி விட்டோம். ஆனால் லிம் இன்னும் பதில் அளிக்கவே இல்லை,” என்றார் அவர்.