எம்பி பேசுகிறார்: அம்னோ தலைவர்கள் சிலாங்கூரில் நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பொறுப்பேற்க மறுப்பதும் அது பற்றி எதுவும் தெரியாது என்று நாடகமாடுவதும் பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது.
2004-இல், ஆரா டமன்சாராவில் 87,188 சதுர அடி நிலம் மிகக் குறைந்த விலையில் சுபாங் அம்னோவுக்கு விற்கப்பட்ட விவகாரத்தை செவ்வாய்க்கிழமை நாங்கள் அம்பலப்படுத்தி இருந்தோம்.அந்த நிலத்தில் 200-வீடுகள் கொண்ட சூரியா டமன்சாரா கொண்டோமினியம் திட்டம் 2006-இல் தொடங்கப்பட்டது. இன்றைய விலப்பருவத்தின்படி அந்த கொண்டோவின் மதிப்பு ரிம90 மில்லியன் ரிங்கிட் இருக்கலாம்.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் நில விவகாரம் பற்றி விளக்கிய அம்னோ, மசீச சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் ஷுக்குர் இட்ருஸ், வொங் கூன் முன் ஆகிய இருவரும் பாலர்பள்ளிகள், சமூக மண்டபங்கள் போன்ற பொதுமக்களுக்குப் பயன்படும் திட்டங்களுக்காக நிலங்கள் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டன என்று கூறினார்.
சரி, அப்படியானால் அந்த 87,1888 சதுர அடி நிலத்தில் பாலர்பள்ளியும் சமூக மண்டபமும் எங்கு உள்ளன என்று அவர்களிடம் கேட்டோம். இப்படி 24 துண்டு நிலங்கள் குறைந்த விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. 2000-ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை பாரிசான் நேசனல் ஆட்சியில் நிகழ்ந்துள்ள அதிகார அத்துமீறல்களையும் ஊழலையும் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்துவோம்.
ஆக, நில அபகரிப்பு தொடர்பில் கையும் களவுமாக பிடிபட்ட அம்னோ தலைவர்கள் அதில் தாங்களும் உடந்தை என்பதை மறுத்து மற்ற அம்னோ தலைவர்கள்மீது பழி போடுகிறார்கள்.
செய்தியாளர்கள் சுபாங் அம்னோ தொகுதித் தலைவர் முகம்மட் புஷ்ரோ மாட் ஜோகோரைத் தொடர்புகொண்டு வினவியதற்கு சுபாங் அம்னோவிடம் அப்படிப்பட்ட நிலம் எதுவும் இல்லை என்று மறுத்தார். “நான் தொகுதித் தலைவர் ஆனதிலிருந்து சுபாங் அம்னோ பெயரில் ஒரு சிறு துண்டு நிலமும் பதிவானதில்லை”, என்றார். மேலும் நெருக்கியதற்கு, நிலம் தொடர்பான கேள்விகளை முன்னாள் தொகுதித் தலைவரிடம் கேட்பதே நல்லது என்றார்.
முன்னாள் தொகுதித் தலைவர் மொக்தார் டாஹ்லனை வினவியதற்கு அவர், கிளானா ஜெயா அம்னோ இடைக்காலத் தலைவர் யஹ்யா பூஜாங்கைக் கைகாட்டினார். அந்த நிலம் சுபாங் அம்னோவுக்குக் கொடுக்கப்பட்டது என்றாலும் “2004-இல் தேர்தல் தொகுதி எல்லை மறு நிர்ணயம் செய்யப்பட்டபோது அது கிளானா ஜெயாவுக்கு மாற்றி விடப்பட்டது” என்றார்.
யாஹ்யா பூஜாங்கைக் கேட்கலாம் என்றால் அவர் நாட்டில் இல்லை. அந் நிலத்தில் சுபாங் அம்னோ தொகுதி தலைமையகம் கட்டுவதற்குத் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் மொக்தார் டாஹ்லன் கூறியிருந்தார். அதுவே, பிஎன் தன் பங்காளிக் கட்சிகளின் நலனுக்காக அதிகாரத்தை மீறி நடந்துகொண்டிருப்பதை ஒப்புக்கொள்கிறார் என்பதற்கு அப்பட்டமான சான்றாகும்.
அதே வேளை, சிலாங்கூர் சட்டமன்றத்தில் மாற்றரசுக் கட்சித் தலைவராகவுள்ள சதிம் டிமான் (இடம்) தமக்கு அது பற்றி எதுவுமே தெரியாது என்று சாதித்தார். அவ்விவகாரம் பற்றி சிலாங்கூர் அம்னோ செயலாளர் முகம்மட் ஸின் முகம்மட்டிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.
முகம்மட் ஸின், “அதைப் பற்றி மேலும் தகவல் திரட்ட அவகாசம் தேவை” என்று நாசூக்காக பதிலளித்தார்.
பொறுப்பேற்பார் இல்லை
இப்படி பொறுப்பை ஒருவர் மற்றவரிடம் மாற்றி விடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. கையும் களவுமாக பிடிபட்டு விட்டதை அம்னோ உணர்கிறது. ஆனால், மக்களின் நிலத்தைச் சொந்த ஆதாயத்துக்கு சுருட்டிக்கொண்டதை ஒப்புக்கொள்ள எவரும் விரும்பவில்லை..
இதில், அம்னோ “மாறிவிட்டது” என்று அடித்துக்கூறும் பிரதமர் இவ்விவகாரத்தில் வாய்மூடி மெளனமாக இருப்பதுதான் சிலாங்கூர் மக்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமளிக்கிறது. சிலாங்கூர் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், நில அபகரிப்பு மோசடி பற்றி விளக்கி அம்னோவின் பாவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
அவர், தவறான வழியில் பெறப்பட்ட நிலத்தை மக்களின் நன்மைக்காக மாநில அரசிடமே திரும்ப ஒப்படைத்து அம்னோவின் கடந்த கால ஊழல் கொள்கைகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும்.
============================================================================================
TONY PUA பெட்டாலிங் ஜெயா உத்தாரா டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்