-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், டிசம்பர் 8, 2012.
ஷா அலாம் சுங்கை ரெங்கம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 23-1-2013 இல் கும்பாபிஷேகம் காணவிருப்பதாக கோவில் தலைவர் தெரியப்படுத்தியுள்ளார். ஆகையால் இவ்வாலயக் கட்டுமான வேலைகள் எவ்வளவு தூரம் முடிவடைந்துள்ளது என்பதனை அறிய வந்துள்ளோம்.
இவ்வாலயம் சிலாங்கூர் மாநில அரசின் சிறப்புக் கண்காணிப்பில் எழுப்பப்படும் இரண்டாவது ஆலயமாகும்.
நிலத்துடன் இதன் கட்டுமானத்திற்கு மாநில அரசு சுமார் 18 இலட்சம் ரிங்கிட்டை பயன்படுத்தியுள்ளது. கணிசமான தொகையைச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆலய நிர்வாகமும் கொடுத்துள்ளது.
பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்த இந்த ஆலயம் இறுதியாக வெட்டிய மாட்டுத்தலையுடன் ஆர்ப்பாட்டம் செய்த அம்னோ ஆதரவாளர்களின் அடாத செயலையும் கண்டது.
மாற்று இடத்துக்காகப் பல்வேறு போராட்டங்களை இவ்வாலய நிர்வாகம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் 40 ஆண்டுகால நில விவகாரத்துக்கு சிலாங்கூர் பக்காத்தான் அரசு விடிவு கண்டுள்ளது. இது மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காமல் இருக்கலாம்!
விளம்பரத்துக்கும், அரசியல் இலாபத்திற்கும் வெற்று வாக்குறுதிகள் வழங்குபவர்கள் நாங்கள் அல்லர் என்பது இவ்வட்டாரத்தில் உள்ள மக்களுக்குத் தெரியும்.
மக்களின் ஆதரவுடன் இவ்வட்டாரத்தில், குறிப்பாக இந்தியர்களுக்கு, நாம் மேற்கொள்ளும் மூன்றாவது கட்டுமானமாகும் இது. இவைகள் அனைத்தும் இம்மாநில மக்கள் மீது நாங்கள் கொண்டுள்ள கடப்பாட்டை உணர்த்தும் செயலாகும்.
இதைப் போன்றே, இவ்வாண்டு இதுவரை இம்மாநிலம் முழுவதிலும் உள்ள 115 இந்து, சீக்கிய ஆலயங்களுக்கு 27 இலட்சம் ரிங்கிட்டை மானியமாக இவ்வரசு வழங்கியுள்ளது.
இதனுடன் சேர்த்து சுமார் 90 இலட்சம் ரிங்கிட்டை இந்து, சீக்கிய ஆலயங்களின் நலனுக்காக சிலாங்கூர் மாநில அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வழங்கியுள்ளது.
இந்தக் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. 1918 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1960 ஆம் ஆண்டுகளில் ஷா அலாம் நகரமாக உருமாற்றம் பெற்ற போது, படிப்படியாக நகரம் வளர்ச்சி கண்டதால், ஆலயம் இருந்த இடங்கள் சுற்றியும் வீடுகளை மாநில அரசின் துணை நிறுவனமான பிகேஎன்எஸ் கட்ட ஆரம்பித்தது. அன்றைய மாநில அரசின் அலட்சியப் போக்காலும், மஇகாவின் சட்ட மன்றத் தொகுதியாக இருந்தும்கூட இந்த ஆலயத்தின் பிரச்சனைத் தீர்க்கவில்லை. இருப்பினும் ஆலயத் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கடுமையான போராட்டங்களை மேற்கொண்டு ஆலயத்தை நிலைநிறுத்தினர்.
கடந்த தேர்தலில் பக்காத்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த வாக்குறுதிகள்படி இந்த ஆலயத்தின் நில விவகாரத்துக்கு நல்ல தீர்வுக்கான முடிவு எடுத்தோம். அந்த ஆலயம் செக்க்ஷன் 23 வீடமைப்பு பகுதியில் இடம் அடையாளங் காணப்பட்ட போது அதனை எதிர்த்து மாட்டுத் தலையுடன் ஆர்ப்பாட்டத்தில் அம்னோ ஆதரவாளர்கள் ஈடுபட்டதை நாட்டு மக்கள் அறிவர்.
இருப்பினும், நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்யும் வண்ணம் சுமார் 15 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள இவ்விடத்தைப் பெற்று, இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 20 ஆயிரம், நாடாளுமன்ற உறுப்பினர் 10 ஆயிரம், மாநில அரசின் பங்காக 50 ஆயிரம், பிகேஎன்எஸ் 96 ஆயிரம் மற்றும் ஆலய நிர்வாகத்தின் பங்காக 150 ஆயிரம் வழங்கப்பட்டு இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வேலைகள் கூடிய விரைவில் முடிந்துவிடும்.
அதனுடன் 80 ஆலயங்களுக்கான நிலத்தை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. இவை எல்லாம் இந்து ஆலயங்களின் வளர்ச்சியில் நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நமது சிறந்த கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதாக இருக்க வேண்டும். மற்றவர்களின் அரசியல் இலாபத்திற்காகவும், வாழ்வுக்காகவும் சமுதாயத்தின் நலனைப் பணயம் வைக்கும் அறிக்கைகளும் ஆர்ப்பாட்டங்களும் நம் மக்களுக்கு எந்த நன்மையும் கொண்டுவராது என்பதை மக்கள் அறிவர்.