2012 அமைதிப் பேரணிச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தான் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்று போலீஸ் என்னதான் காரணம் சொன்னாலும் கோம்பாக்கில் பக்காத்தான் ரக்யாட் ஏற்பாடு செய்திருந்த அன்வாரின் செராமாவில் கைகலப்பு நிகழாமல் தடுத்து போலீஸ்தான் அமைதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்கிறது பிகேஆர்.
டிசம்பர் 4 பேரணியின்போது ஆதரவாளர்களைக் கட்டுப்ப்பாட்டுடன் வைத்துக்கொள்ள என்னென்ன தேவையோ அத்தனையையும் ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தார்கள் என்று பத்துமலை சட்டமன்ற உறுப்பினர் அமிருடின் ஷாரி (இடம்) கூறினார்.
“நாங்கள் (ஏற்பாட்டாளர்கள்) பேரணியைக் கட்டுப்பாட்டில்தான் வைத்திருந்தோம்; பாதுகாப்புக்கும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் 300பேர் அமர்த்தப்பட்டிருந்தனர்.
“வீடியோவைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். பொறுப்பற்றவர்கள் (அம்னோ ஆள்கள்) எங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பின்னர்தான் சச்சரவு மூண்டது.
“கைகலப்பு என்று வரும்போது போலீஸ்தான் பொறுப்பு. (அமைதியை நிலைநாட்டும்) அதிகாரம்) போலீசிடம்தான் உள்ளது”, என்று அமிருடின் செய்தியாளர் கூட்டமொன்றில் இன்று கூறினார்.
அன்று அன்வாரின் செராமாவில் நிகழ்ந்த வன்செயல்களில் பக்காத்தான் ஆதரவாளர்கள் இருவரும் அம்னோ ஆதரவாளர் ஒருவரும் காயமடைந்தனர்.