திரை அரங்கு ஒன்று கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்திருந்தாலும் ஷா ஆலம் மாநராட்சி மன்றம் அவ்வட்டார மக்களின் கருத்தையும் கேட்டறியவது அவசியம் என்று கூறுகிறார் ஷா ஆலம் எம்பி காலிட் அபு சமட்.
ஷா ஆலம், செக்ஷன் 16-இல், ஆலம் எவன்யு வளாகத்தில் திரை அரங்கு ஒன்று அமைக்கப்படுவதில் சுல்தானுக்கு “மறுப்பில்லை” என்று கூறும் கடிதம் சிலாங்கூர் சுல்தான் அலுவலகத்திலிருந்து ஷா ஆலம் மேயர் முகம்மட் ஜாபார் அதானுக்கு அனுப்பப்பட்டிருப்பது பற்றிக் கருத்துரைத்த காலிட், அதை ஒரு அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.
“மேயர் அதை ஒரு அங்கீகாரமாகக் கருதக்கூடாது. அது அத்திட்டத்துக்கு மறுப்பில்லை என்று கூறும் ஒரு குறிப்பு.
“எம்பிஎஸ்ஏ அத்திட்டத்துக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் கருத்தையும் கேட்டறிய வேண்டும். அதுதான் முறையாகும்”, என்று காலிட் (வலம்) கூறினார். .
அவ்வளாகத்தில் திரை அரங்குகளும் மற்ற கேளிக்கை மையங்களும் அமைவதை விரும்பாத குடியிருப்பாளர்கள் காலிட்டிடம் புகார் செய்துள்ளனர்.
வழிபாட்டு இல்லங்களை மதிக்க வேண்டும்
அதற்கு அருகில் ஐ-சிட்டியிலும் கோத்தா ராஜாவிலும் சினிமா அரங்குகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விவகாரத்தில் ஷா ஆலம் மேயர், வட்டார மக்களுடன் ஆலோசனை கலப்பது நல்லது என்று காலிட் சொன்னார்.
நேற்று த ஸ்டார் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிலாங்கூர் சுல்தான், தம் தந்தையார் ஷா ஆலமில் திரை அரங்குகள் அமைவதை விரும்பியதில்லை என்றார்.
ஆனால், சுல்தான் ஷராபுடின், ஷா ஆலமில் திரை அரங்குகள் அமைவதை எதிர்க்கவில்லை. ஆனால், அவை தொழுகை இல்லங்களுக்கு அருகில் இருப்பதை அவர் விரும்பவில்லை.
இவ்விசயத்தில் தம் கருத்தை மட்டுமே தெரிவிக்க முடியும் என்று கூறிய சுல்தான் இறுதி முடிவை எம்பிஎஸ்ஏதான் செய்ய வேண்டும் என்றார்.