பிரதமர்: நாடற்ற இந்தியர் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது

அடையாளக் கார்டு இல்லாததால் 300,000க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் நாடற்றவர்களாக இருப்பதாக பக்காத்தான் ராக்யாட் கூறிக் கொள்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நிராகரித்துள்ளார். இன்று காலை கோலாலம்பூரில் மஇகா பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப்,  அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்றார்.

“முதலாவதாக 300,000 நாடற்ற இந்தியர்கள் இல்லை. நாங்கள் பதிவு செய்துள்ளோம். நான் இன்று அதனை மீண்டும் ஒரு முறை சுப்ரமணியம் சதாசிவத்திடம் சரி பார்த்தேன். 9,000 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.”

“அதில் 4,500 பேர் விவகாரம் தீர்க்கப்பட்டு அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன,” என்றார் அவர்.

“கணிசமான எண்ணிக்கையில் இந்திய வம்சாவளியினரும் சபா, சரவாக்கில் சில பூர்வகுடி மக்களும் குடியுரிமைப் பத்திரங்கள் இல்லாமல் பிறந்துள்ளனர்.”

அந்த நிலைக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாதது, எழுத்தறிவின்மை, வறுமை, அறியாமை ஆகிய பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

என்றாலும் ஆளும் கட்சி அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதில் அக்கறை காட்டாததே அதற்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.

முறையான ஆவணங்கள் இல்லாத போது பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிக்கூடத்தில் சேருவதும் பொதுச் சுகாதாரக் கவனிப்பைப் பெறுவதும் வாக்களிக்க முடியாமல் போவதும் சிரமமாகின்றது.

TAGS: