பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சொல்வது போல ஒரே மலேசியா கோட்பாடு உறுதியற்றதாக இருப்பதற்கு அம்னோ அதனை ஆதரிக்க மறுப்பதே காரணம் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார்.
“நஜிப் தேவை இருப்பதால் ஒரு தோற்றத்தை அளிக்கிறார். தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ தலைமைத்துவத்தின் அங்கீகாரத்தை பெறத் தவறியுள்ளதை மறைக்க முயலுகிறார். வியூக முரண்பாடு இருப்பதாகச் சொல்கிறார்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
ஒரே மலேசியா கோட்பாடு வியூக முரண்பாட்டைக் கொண்டிருப்பதால் காலப் போக்கில் பொது மக்கள் அதற்கு விளக்கமளிக்க முடியும் என பிரதமர் சொன்னதாக மலாய் மெயில் நாளேட்டில் செய்தி வெளியானது பற்றி லிம் கருத்துரைத்தார்.
என்றாலும் மக்கள் அந்தக் கோட்பாட்டை இப்போது புரிந்து கொண்டிருப்பதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
ஒரே மலேசியா கோட்பாடு பற்றி அரசாங்க உருமாற்றத் திட்ட செயல் திட்டத்தில் தொடக்க காலம் முதல் விளக்கப்பட்டுள்ளதை லிம் சுட்டிக் காட்டினார். மக்கள் தங்களை முதலில் மலேசியர் எனக் கருதுவதற்கு அது வழி வகுக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.
“தமது ஒரே மலேசியாக் கொள்கைக்கு அம்னோ தலைமைத்துவம், அமைச்சரவை ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெறுவதற்குத் தவறி விட்டார் என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.”
“அம்னோ இன்னும் கெத்துவானான் மிலாயு (மலாய் மேலாண்மை) என்னும் தனது சிறப்புச் சித்தாந்தத்தில் முழுமையாக ஈடுபாடு கொண்டுள்ளது. அது எல்லோரையும் அரவணைப்பதாகக் கூறப்படும் ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும்,” என்றார் அவர்.
அதற்கு ஆதரவாக லிம், தாம் முதலில் மலாய்க்காரன் அடுத்து மலேசியன் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியதைச் சுட்டிக் காட்டினார்.
இன்னொரு எடுத்துக்காட்டு தங்கள் சொந்த நிலத்தில் மலாய்க்காரர்கள் ஒரங்கட்டப்படுவதாக கூறிக் கொண்டு அதற்காக வருந்தும் பாடல், அண்மைய அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்ட முடிவில் பாடப்பட்டதாகும் என்றார் அவர்.
தொடக்கத்தில் கூறப்பட்ட அரவணைப்பு போக்கைப் பின்பற்றாமல் அந்தச் சுலோகம் ஒரே மலேசியா டி சட்டைகளையும் டப்பர்வார் பொருட்களையும், கணினிகளையும் தண்ணீர் தொட்டிகளையும் ரொக்க உதவிகளையும் வழங்கும் தேர்தல் பிரச்சார மாயாஜாலமாக மாறி விட்டது என லிம் குறிப்பிட்டார்.